22.9.13

என் கதைகள் . . .

திண்ணையில் என் கதை

http://puthu.thinnai.com/?p=22671

நேரமிருந்தால் படித்துப்பாருங்கள்.
அதிக நேரமிருந்தால் குறைநிறைகளை சொல்லுங்கள்.
முக்கியமாய் குறைகளை . . .

அடுத்து முறையே செப்டம்பர் மற்றும் ஆகஸ்டு  மாத கதை களத்தில் முதல் பரிசு பெற்ற என் குறுங்கதைகள் . . .

(அப்பா துரை ஸார் மன்னித்துக் கொள்ளுங்கள். இது போன்ற கதைகளை எழுதக் கூடாது என்று தான் பார்க்கிறேன். ஆனாலும் எழுதும்படி கேட்கும் போது முடியாது என்று சொல்ல முடியவில்லை. சரி பயிற்சியாகவாவது இருக்கட்டும் என்று. . . )


பந்தயம்
(யோசித்துப் பார்த்தால் கொஞ்சம் பைத்தியக்காரத்தனம் போல் தோன்றினாலும் அது அவனுக்குப் பிடித்திருந்தது. ....)

யோசித்துப் பார்த்தால் கொஞ்சம் பைத்தியக்காரத்தனம் போல் தோன்றினாலும் அது அவனுக்குப் பிடித்திருந்தது.

சரிடா! ராத்திரி பத்து மணிக்கு பனானா லீஃப் கிட்ட நில்லு, நான் காடில உன்னை ஏத்திக்கறேன்என்றான் குமாரிடம்.

வேணாம்டா, எனக்கு அந்த இடத்தைப் பத்தி நல்லா தெரியும்...”

இதோ பார்றா இப்பிடி பயப்படறான். போடா! போயி வீட்டில ஒளிஞ்சுக்கோ. நான் பேய் எப்படி இருந்ததுன்னு பார்த்துட்டு வந்து சொல்றேன்என்றான் கோபால்.

மண்டாய் இடுகாட்டிற்கு நடுசாமத்தில் சென்று, பேய் இல்லையென்று நிரூபிப்பதாய் ஜானிடம் பந்தயம் கட்டியிருந்தான் கோபால். போகவில்லையென்றால் நண்பர்களுக்கு நடுவே மானத்தை வாங்கிவிடுவான். வேறு வழியின்றி ஒப்புக்கொண்டான் குமார்.

நள்ளிரவில் இருவரும் மண்டாயை நோக்கி விரைந்துக் கொண்டிருந்தார்கள். குமார் முகம் வெளுத்துப்போய், அசாதாரண மௌனத்திலிருந்தான். அவன் மனதிலோடும் எண்ணங்களை கோபாலால் புரிந்துக்கொள்ள முடிந்தது.

பந்தயப் பணம் இருநூறு வெள்ளி கிடைக்கட்டும் அப்ப பார்க்கறேன் உன் முகத்தைஎன்று நினைத்துக் கொண்டான்.

மண்டாய் லேனில் காடியைத் திருப்பி ஒரு மரத்தினடியில் நிறுத்தினான் கோபால். தூரத்தில் இடுகாட்டு கட்டிடம் மரங்களுக்கிடையே பிரம்மாண்டமாய் தெரிந்தது. காற்றின் அமானுஷ்ய குளிர்ச்சியில் உடல் சிலிர்த்தது. மிக லேசாய் நெஞ்சில் பயம் கிளைக்க, சட்டைப்பையிலிருந்து சிகரெட்டை எடுத்து பற்றவைத்தான் கோபால். சிறிது தைரியம் பிறந்தது.

குமார், என்னடா இப்படி இருக்க! பேய் வரப்போகுதுன்னு பயப்படறியா? அதோ பார் அந்த கட்டிடத்துலயிருந்து வரப்போகுதா இல்லை இந்த மரத்துக்கு பின்னாலிருந்தா...” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே புகைச்சுருள் போல ஏதோவொன்று அங்கிருந்து கிளம்பியது. கோபாலுக்கு திக்கென்றது. ச்சே! சிகரெட் புகை... என்று அதைக் கைகளால் விலக்கிவிட்டான்.

உண்மையாவே பேய் இருக்குன்னு நினைக்கறியா குமாரு!”

நாம செத்த பிறகு என்னவாவோம்னு நினைக்கற”?

என்னடா சாமியார் மாதிரி பேசற! பேய் இருந்தா இத்தனை நாள் எப்படிடா என் கண்ணுல படாம இருந்திருக்கும். யீஷீன்ல கொலம்பாரியத்துக்கு பக்கத்துலேயே தான் என் வீடு தெரியும்ல...”

எல்லாத்துக்கும் முதல் தடவைன்னு ஒன்னு இருக்குடா

சரி! சரி! வேறு எதைப்பத்தியாவது பேசுஎன்று சொன்ன போது தூரத்தில் ஊளைச் சத்தம் கேட்டது.

நரியா! நாயா! அதுவும் இங்கேஎன்று யோசித்தபடியே திரும்பிய கோபாலுக்கு தூக்கி வாரிப் போட்டது.

குமார்...! எங்கேடா போயிட்ட, குமாரு...”

அவன் சட்டைப் பையிலிருந்த கைத்தொலைப்பேசி ஒலித்தது. திரையில் குமார் என்ற பெயரைப் பார்த்து திகைத்தான்.

சாரிடா! கெளம்புற நேரத்தில விஷயம் தெரிஞ்சு எங்கம்மா, போகவே கூடாதுன்னு நிறுத்திட்டாங்க! மன்னிச்சிடுடா!”

கோபாலின் முதுகுத்தண்டு சிலிர்த்தது.     

மொத்த வார்த்தைகள்: 249


பாவமன்னிப்பு
(மனதில் மண்டிக்கிடப்பதையெல்லாம் யாரிடமாவது கொட்டித்தீர்க்க வேண்டும் போல் இருந்தது.....)

மனதில் மண்டிக்கிடப்பதையெல்லாம் யாரிடமாவது கொட்டித்தீர்க்க வேண்டும் போல் இருந்தது.  ஆனால் அதனால் வரும் அவமானத்தை ஏற்றுக்கொள்ளும் துணிவு எனக்கில்லை. வேறுவழியில்லை!  தோழனாய் பழகிய அப்பாவிற்காவது என் தற்கொலைக்கான காரணம் தெரியவேண்டும்.

அப்பா! என்னை மன்னித்துவிடுங்கள்! 

போன மாதம் விளையாட்டாக தான் ஐம்பது வெள்ளியை அம்மாவின் கைப்பையிலிருந்து எடுத்தேன். யாருக்கும் தெரியாமல் அதைச் செய்ததில் இருந்த குறுகுறுப்பை மிகவும் ரசித்தேன். நண்பர்களோடு அதை செலவு செய்தபோது அவர்கள் ஆச்சர்யமாய் பார்த்தார்கள். அந்த ஆச்சர்யம் எனக்குப் பிடித்திருந்தது.

அம்மா அந்த ஐம்பது வெள்ளியைத் தேடிய போது வருத்தப்பட்டேன். ‘எங்கே திருட்டு கொடுத்தேன்னு தெரியலையே!’ என்று அவர் புலம்பிய போதுதிருட்டுஎன்ற வார்த்தை என் மனதை பலமாக தாக்கியது. ச்சே! என்ன காரியம் செய்தேன்! கேட்டால், தன் செலவைக் குறைத்துக் கொண்டாவது, மறுக்காமல் வாங்கிக்கொடுக்கும் பெற்றவரிடம் திருடியிருக்கிறேன். மனம் துடித்தது. இனி செத்தாலும் திருடுவதில்லை என்று முடிவுவெடுத்தேன்.

மறுநாள் பள்ளியில் என் முடிவு ஆட்டம் கண்டது. இடைவேளையின் போது தனக்கு இருபது வெள்ளி கொடுக்கவில்லையென்றால் ஃபேஸ்புக்கில் என் திருட்டைப் பற்றி போடுவதாய் சதீஷ் மிரட்டினான். என்னிடம் இல்லை என்று சொன்னதற்குதிருடிக் கொடுஎன்றான்.

அவனை சமாதானப்படுத்த நம் பணிப்பெண் கவிதாவின் பையிலிருந்து எடுத்தேன். அன்று கவிதா முகம் சிவக்க அழுத போது என்னையே என்னால் மன்னிக்க முடியவில்லை.

நேற்று சதீஷ் மறுபடி பேசினான். இப்போது நூறு வெள்ளிகள் வேண்டுமாம்! இந்த முறை தரப்போவதில்லை! எப்படியும் அவன் ஃபேஸ்புக்கில் இதைப் போடுவான். பள்ளியில் அனைவருக்கும் தெரிந்துவிடும். நீங்கள் எவ்வளவு வருத்தப்படுவீர்கள் என்று தெரியும். அதைப் பார்க்கும் தைரியம் எனக்கில்லை! போகிறேன்செல்வா

எழுதிய தாளை தொலைபேசிக்குக் கீழே வைத்துவிட்டு செம்பாவாங் கடற்கரையை நோக்கிச் சென்றேன். ஆனால் அங்கே சத்யா ஆன்ட்டியிடம் மாட்டிக் கொண்டேன்.

வழியில் அப்பா எதுவும் பேசவில்லை. நான் எழுதிய கடிதம் அவரிடம் இருந்தது. என்னைத் தனியாக அறைக்குள் அழைத்துச் சென்று,

செல்வா! நான் சொல்றத நீ புரிஞ்சுக்கணும். என்ன தப்பு செஞ்சிருந்தாலும் நீ என் பிள்ளை! எனக்கு உன் உயிரை விட பெருசு எதுவும் இல்லை! எனக்கு நீ தான் முக்கியம். தவறு செய்யாத மனுஷனே உலகத்தில கிடையாது! அதுக்கு வருத்தப்படறதைவிட இனி அப்படி செய்யமாட்டேன்னு உறுதியெடுத்துக்கறது தான் புத்திசாலிதனம். இனி இந்த விஷயத்தை நான் பார்த்துக்கறேன்! நீ யாரிடமும் இதைப்பற்றி பேசாதே!” என்றார்.

என் கண்களின் அனிச்சையாய் கண்ணீர் வழிந்தது.


31.8.13

விடுதலை


அதிகாலை மூன்று மணி இருக்கும். எனக்குள் இருந்த மிருகம் விழித்துக் கொண்டது. நாக்கு வரண்டது. இதயம்அதைக் கொடு! அதைக் கொடு!’ என்று வேகமாய் அடித்தது. கைகள் தன்னிச்சையாய் நடுங்கின. ஏழு வருடங்களாய்  உயிர் மூச்சிலே கலந்திருந்த போதையை, என் உடலிலிருந்த சகல பாகங்களும் தேடத் தொடங்கின . கொஞ்சம் கொஞ்சமே கொஞ்சம், இருந்தால் போதும். அனைத்தும் என் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும்.

மெத்தைக்கு அடியில், தொலைக்காட்சி பெட்டிக்குப் பின்னே, புத்தகங்களுக்கு இடையே  என்று சகல இடங்களையும் வெறித்தனமாய் தேடத் தொடங்கினேன்.  இந்த சனியனை விட்டுத் தொலைய வேண்டும் என்று கடந்த ஒரு மாதமாய் எவ்வளவு பாடு! உள்ளே  அலறிக் கொண்டிருக்கும் மனதை எத்தனை முறை வெற்றிக் கொள்வது. வேண்டாம்! இதோடு தான் வாழ வேண்டும் என்றால், வாழ்ந்து தொலைக்கிறேன்! நீலச் சட்டைக்காரர்கள் பிடித்துச் செல்வார்கள். அம்மா அழுவாள். அதை பிறகு பார்த்துக் கொள்ளலாம். அனைத்துப் பொருட்களையும் வேகமாய் கலைத்துப் போடத் துவங்கினேன்.

கடைசியாய் சிக்கிவிட்டது. ஒன்று தான். இருந்தாலும் பரவாயில்லை.  அதை  வேகமாய் எடுத்துக் கொண்டு படுக்கையில் அமர்ந்த போது, மனதினுள் மனைவியின் குரல் கேட்டது. ‘இனி என்னால உங்க கூட இருக்க முடியாது! எங்களை விட உங்களுக்கு  இது தான் பெருசாத் தோணுதுன்னா நான் கிளம்பறேன்!’ ‘அப்பா!’ என்று அழுதபடி கட்டிக் கொண்டிருந்த குழந்தையை பிடுங்கி இடுப்பில் செருகிக் கொண்டு அவள் கிளம்பிய காட்சி நினைவில் தோன்றியது. என் கால்களைத் தழுவிக் கொண்டிருந்த அந்த பிஞ்சு உடலின்  ஸ்பரிசத்தை இன்றும் என்னால் உணர முடிந்தது. இதோ இப்படி வரண்டு போயிருக்கும் என் தோலுக்கு  சற்றும் சம்பந்தமில்லாத மெத்தென்ற  பட்டு உடல் திரைப்பட கதாநாயகனைப் போல் தன் அப்பாவால் எதையும் செய்ய முடியும் என்று நம்பிக்கையோடு என்னை அவள் சுற்றி வந்த கணங்கள்... அந்த நம்பிக்கையைச் சிதைப்பதைப் போல இப்போது நான் கையில் பிடித்திருக்கும் இந்த சாத்தான். ச்சே! என்று அதை குப்பையில் எறிந்தேன். மனம் மாறிவிடப்போகிறது என்ற பயத்தில், அதை மறுபடி எடுத்து கழிப்பறைப் பீங்கானில் போட்டு ஃப்ளஷ்ஷை இழுத்து விட்டேன்.

வெரி குட், சந்திரன்! போதை மருந்தை தூக்கியெறிய முடிந்தது, உங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி! இனி உங்களால் மனதை நிச்சயமாய் அடக்க முடியும்! நீங்கள் போதையின் பிடியிலிருந்து மிக வேகமாய் வெளியேறிக் கொண்டிருக்கிறீர்கள். வாழ்த்துகள்!” என்றார் மருத்துவர். என் மகளைச் சேரும் நாட்களை மகிழ்ச்சியோடு எண்ணத் துவங்கினேன்.
(இந்தக் கதை இரண்டாம் பரிசு பெற்றது.
ஆகஸ்டு மாதத்திற்கு கொடுக்கப்பட்ட தொடக்க வரி 'மனதில் மண்டிக்கிடப்பதையெல்லாம் யாரிடமாவது கொட்டித் தீர்க்க வேண்டும் போல இருந்தது .. .' அதற்கு நான் எழுதிய கதை அடுத்த பதிவில் . . .)

11.7.13

கைத்தொலைப்பேசியும் நானும்


பாம்பு 1, பாம்பு 2 க்கு போன் செய்ததாம். போனை எடுக்காமலேயே, தனக்கு ஒரு பாம்பு தான் போன் செய்கிறது, என்று பாம்பு 1 கண்டுபிடித்து விட்டதாம். எப்படி? (அப்போதெல்லாம் காலர் ஐ.டி பிரபலம் இல்லை)
இப்படி கேள்வி கேட்டு கடிக்கும் போதெல்லாம் யோசித்ததில்லை, கைத் தொலைபேசி இவ்வளவு பிரபலமாகும் என்று. அப்போது வீட்டுத் தொலைபேசிகளே மிகப் பெரிய அதிசயம். அவற்றை திரைப்படத்தில் பெரிய பணக்காரர்களின் வீடுகளில் மட்டுமே பார்த்திருந்தேன்.

பிறகு,  தொன்னூறுகளின் கடைசியில் கைத் தொலைப்பேசி அறிமுகமான போது கூட அது எங்களது நம்பிக்கையை அவ்வளவு சீக்கிரம் பெற்றுவிடவில்லை. அது பொருளாதார பிரச்சனைகளை உருவாக்கக் கூடும் என்ற சந்தேகம் இருந்துக் கொண்டே இருந்தது. ஆனால் எங்களின் நம்பகத்தன்மையைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், மிகவேகமாய் இந்திய மக்களின் வாழ்க்கையில் ஊடுறுவத் துவங்கியது கை.தொ. பேசி.

முட்டை வெந்து போவது போல மூளை வெந்து போய்விடுமாம்!’ என்ற கதைகளையெல்லாம் மீறி ஒரு மனிதனின் ஸ்டேடஸ் சிம்பலாக மாறிப் போனது. வீட்டை விட்டு வெளியே போகும் கணவரின் இருப்பிடத்தை அறிந்துக் கொள்ளும் வசதி, வரேன் . . . வரேன் . . . வந்துகிட்டே இருக்கேன் . . . வந்துவிட்டேன், என்று வீட்டிலிருந்தே சொல்லும் வசதி மற்றும் இன்னபிற வசதிகளுக்காக செல்பேசி மெல்ல மெல்ல எங்கள் வீட்டினுள் நுழைந்து கைப்பையில் இடம் பிடித்தது.

இப்போது பர்ஸ் தொலைந்து போனால்அட்டே! போனை அதனுள்ளே வைக்காமல் போனோமே!’ என்று சலித்துக் கொள்கிறேன்.
ஆரம்பத்தில் மிஸ்டு கால்களை வேறு விதமாகவும் உபயோகப்படுத்திக் கொண்டோம் நாங்கள். நான் வேலையில் பிஸியாக இருக்கும் போது  வீட்டிலிருந்து

·         ஒரு மிஸ்டு கால் வந்தால் என் பெண் நம்பர் 1 வீட்டிற்கு வந்துவிட்டாள் என்று அர்த்தம்.

·         இரண்டு மிஸ்டு கால் வந்தால்பெண் நம்பர் 2 வந்துவிட்டாள்

·         மூன்று மிஸ்டு கால் ((2+1) அல்லது (1+2)) என்றால் இருவரும் சுகமாய் வந்து சேர்ந்துவிட்டார்கள்.

·         நான்கு மிஸ்டு கால்- ‘அம்மா! உன்னோடு பேச வேண்டும் போனை எடு

கை. தொ. பேசியால் வேறு சில வசதிகளும் உண்டு.

சில மெகா அறுவைகளிடம் மறக்காமல் போன் நம்பரை வாங்கி வைத்துக் கொள்வேன் நான், அடித்தால் கண்டிப்பாய் எடுக்கக்கூடாது என்பதற்காக. அதற்காக அவர்கள் உறவை முறித்துக் கொள்வேன் என்பதும் இல்லை. நான் பிஸியாகப் போகும் ஐந்து நிமிடங்களுக்கு முன்னால் போன் செய்து, ஓரிரு நிமிடங்கள் பேசிவிட்டு வைத்து விடுவேன்.

 என் தோழி ஒருவர் போனில் மிக சுவாரஸ்யமாய் பேசுவார். சில சமயங்களில் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக கூட பேசியிருக்கிறோம். சந்தித்து நெடு நாட்களாகிவிட்டதே என்று ஒரு முறை அவர் வீட்டிற்கு சென்றேன். நான் அங்கே இருந்ததில் பாதி நேரம், அவர் போனிலேயே தான் பேசிக் கொண்டிருந்தார்.

சரி! இவரோடு போனிலேயே பேசிக்கொள்ளலாம் என்று வந்து விட்டேன். பேனா நண்பர்கள் வழக்கொழிந்து போய், இது போன்ற போன் நண்பர்கள் தற்போது அதிகமாகிவிட்டார்கள்.

 முன்பிருந்த பார்ன்  வித் சில்வர் ஸ்பூன்போல, இப்போதுள்ள பிள்ளைகள் எல்லாம்பார்ன் வித் நோக்கியா போன்ஆகிவிட்டார்கள்.

 இவர் மற்றொரு தோழி. இவருக்கு எப்போது போன் செய்தாலும், அவரது மூன்று வயது பெண் தான் எடுப்பாள். கொஞ்ச நேரம் பேசி விட்டு, அம்மாவிடம் கொடு என்றால், ஏடாகூடமாய் ஏதாவது கேள்வியைக் கேட்டு, அதற்கு பதில்  சொல்ல வில்லையென்றால் கொடுக்க மாட்டேன் என்பாள். தோழியுடன் பேசுகிறேனா இல்லையா என்பது அந்த சிறுமியின் அப்போதைய மனநிலையைப் பொறுத்தது. சில முறை வெறுத்துப் போய் தோழியுடன் பேசாமலேயே போனை வைத்திருக்கிறேன்.

 இதைக் நேரே சொன்ன போது தோழி பெருமையாய் சிரித்துக் கொண்டார். அது மட்டுமல்லாது அவளது மற்ற பிரதாபங்களையும் சொல்லத் தொடங்கிவிட்டார். அது பின்வருமாறு:

 ஒரு முறை போன் தொலைந்து போக, மிஸ்டு கால் கொடுத்து பார்த்திருக்கிறார்கள். ரிங் போகிறதே தவிர போன் எங்கே என்று கண்டு பிடிக்க முடியவில்லை. அதை வைத்து விளையாடிமகள் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறாள். எழுந்த பிறகு போனை ப்ரிட்ஜிலிருந்து எடுத்துக் கொடுத்திருக்கிறாள்.

மற்றொரு முறை போனை வாஷிங் மெஷினில் துவைத்த துணிகளோடு கண்டுபிடித்திருக்கிறார்கள்.

 இப்படி, போன் சில நேரங்களில் நம் பிள்ளை வளர்ப்பு முறைகளைரிங்போட்டு காட்டுகிறது.

போன்ஆல் பிள்ளைகள் கெடுகிறார்களா, அல்லது பிள்ளைகள் போனைக் கெடுக்கிறார்களா என்று பட்டிமன்றம் வைக்கலாம் போல!

ஆனாலும், வாழ்க்கையில் இடக்கை, வலக்கையை விட முக்கியமாய் போன, பாழாய் போன செல்போன் இல்லையென்றால்  வேலை ஓடவில்லையே! என்ன செய்வது?

 ஆரம்பத்தில் கேட்டிருந்த கேள்விக்கான விடை உங்களுக்கு தெரிந்திருக்கக் கூடும்,

பாம்பின்கால்பாம்பறியும்

(ஜீலை மாத கதைக்கள போட்டிக்கான தொடக்க வரி
"அதிகாலை மூன்று மணி இருக்கும். எனக்குள் இருந்த மிருகம் விழித்துக் கொண்டது . . .".
இதற்கு நான் அனுப்பிய குறுங்கதை அடுத்த பதிவில்)

7.7.13

தகப்பன்சாமி


(ஜீன் மாத கதை களத்தின் போட்டிக்கு கொடுக்கப்பட்ட தொடக்க வரி 
'அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை. அப்படிச்சொன்னது எனக்கு அதிர்ச்சியளித்தது...')

அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை. அப்படிச்சொன்னது எனக்கு அதிர்ச்சியளித்தது.
ஏன்ப்பா…!’ என்றான் நித்திலன். அவன் குரலிலும்  எனக்கிருந்த அதே உணர்ச்சி!
அடுத்த வருஷம் உன் பெயரைஎன்.எஸ்ல பதிவு பண்ணனும். இப்பவே கிளம்பிட்டா பிரச்சனை இல்லை!”
நான் ஏன்ப்பா என்.எஸ் போகக்கூடாது!”
இல்லடா! எப்படியும் ஊருக்கு போயிடப் போறோம்! எதுக்கு இப்ப வீணா இதுலயெல்லாம் நேரத்தை செலவு செய்யணும், சொல்லு?

இனி இங்கே தான் வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு பேரதிர்ச்சி!
இத்தனை நாள் இதைப் பற்றி எதுவுமே சொல்லலையே! திடீர்ன்னு என்னங்க?” என்றேன்.
இல்லம்மா! கொஞ்ச நாளாவே இதை யோசிச்சுகிட்டு தான் இருந்தேன். நான் வாழ்ந்த வீடு, படிச்ச பள்ளி, விளையாடிய இடம்..... உனக்கும் தான்! இதையெல்லாம் எப்படிம்மா விட்டுட்டு கடைசி வரை இங்கேயே இருக்கறது? அப்பா அம்மா தான் இல்லை! ப்ச்... இதை முன்னவே யோசிச்சிருந்தா கடைசி காலத்திலயாவது  அவங்க கூட இருந்திருக்கலாம்!”

நித்திலனின் முகம் வாடிப் போய் விட்டது.
அறைக்குள் சென்று நூலக புத்தகத்தோடு அமர்ந்து கொண்டிருந்தாலும், அவனுடைய கவனம் புத்தகத்தில் இல்லை என்று புரிந்தது. அவன் கை அருகில் இருந்த செய்தித் தாளின் ஓரத்தை சுருட்டியும் நீவியும் விட்டபடி இருந்தது.
 
எனக்கும் பழைய நினைவுகள் அவ்வப்போது வந்து சென்றபடி தான் இருந்தன. அதிலும் சொந்த குடும்பத்தினரைக் கூட தினமும் பார்த்து பேச முடியாமல் போகும் இப்போதைய இயந்திரத்தனமான வாழ்கையில், வங்காள விரிகுடா ஞாபகங்கள் ஏற்படத்தான் செய்தன.

ஆனாலும் பிள்ளைகள் படிக்க, கைநிறைய சம்பாதிக்க என்று இருக்கும் நல்ல ஒரு வாய்ப்பை எப்படி விடுவது! அதிலும் வசதியான வாழ்க்கைக்கு
பழக்கப்பட்டு விட்டு அங்கே போய் கொசுக்கடியில் அல்லாடி... இங்கே கணினியிலேயே அனைத்தையும் முடித்து விடலாம். அங்கேயென்றால் ஒவ்வொன்றிற்கும் நாள் கணக்கில் அலைய வேண்டியிருக்கும்.....

இரவு செய்தி பார்த்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்த போது,
அப்பா!” என்று அழைத்தான் நித்திலன்.  
சற்று தயங்கி விட்டு
நான் விளையாடிய ப்ளே கிரௌண்ட், என்னோட நண்பர்கள், என்னோட பள்ளிக்கூடம் எல்லாம் இங்க தானேப்பா இருக்கு. இதையெல்லாம் பார்க்க முடியாதுன்னு நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்குப்பாஎனக்கு என் நண்பர்கள் கூட சேர்ந்து என்.எஸ் செய்யணும்ன்னு ஆசையா இருக்கு! எல்லோர் கூடவும் படிச்சுட்டு, நான் மட்டும் என்.எஸ் செய்யமாட்டேன்னு சொல்றது தப்பில்லையாப்பா…!”  என்றான்.

இரவு, தூங்கிக்கொண்டிருந்த மகனின் தலையை கோதிவிட்டப்படி பக்கத்தில் அமர்ந்திருந்தார் கணவர். அவர் முகத்தில் பெருமிதம் தெரிந்தது.
N.S- National Service
(இந்த கதைக்கு முதல் பரிசு கிடைத்தது)


3.6.13

சிறுகதையின் வழி கடந்த கால நினைவுகள்

Old parliment house (Singapore) ல் இருக்கும் Art Houseல் Nostalgic memories through short stories என்ற தலைப்பில் என்னுரை(படம்  கூகுளிலிருந்து)எல்லா ஊர்களையும் போல எங்கள் வசிப்பிடத்திலும் ஒரு பெரிய தண்ணீர் தொட்டி இருந்தது. எங்கோ பிடிக்கும் சங்கு,அந்த பக்கத்திலிருந்து தான் கேட்கும். அப்போதிருந்தது பூசணிக் கொடி படர்ந்த ஓர் ஓட்டு வீடு, இளமையான அம்மா,அப்பா. மற்ற நாட்களில் மிடுக்குடன் பேண்ட் சட்டையுடுத்தி சைக்கிளில் வேலைக்கு செல்லும் அப்பா, ஓய்வு நாட்களில் லுங்கியோடு சைக்கிளை துடைத்துக் கொண்டிருப்பார். வானொலி பிரபலமான ஹிந்தி பாடல்களைப் பாடிக் கொண்டோ அல்லது ஆகாசவாணியின் செய்தி அறிக்கையை வாசித்துக் கொண்டோ இருக்கும்.

அந்த நேரம் தெருவில் ஐஸ் வண்டிகாரன் அமுக்கும் ஹாரனின் ஒலி முதலில் கேட்கும்.பின் பாலேஸ், கப்பேஸ் சேமியா ஏஸ் என்ற குரலுடன் தெருவிற்குள் நுழைவார் அவர். அவர் தள்ளி வரும் சக்கரம் வைத்த செவ்வகப் பெட்டிக்குள் எங்கள் கனவுப் பொருட்கள் இருக்கும். ஆரஞ்ச்,மேங்கோ, க்ரேப் குச்சி ஐஸ்களை தின்று விட்டு,கலர் நாக்கிலும் உதட்டிலும் நன்றாக ஒட்டியிருக்கிறதா என்று எங்களுக்குள் சரிபார்த்துக் கொள்வோம்.

அதே போல, ஜல் ஜல் என்று சலங்கைகள் சப்திக்க வரும் ஜவ்வு மிட்டாய்க்காரன் மிகப் பிரசித்தம் எங்கள் தெருவில். அவனது மூங்கில் கழியின் உச்சியில் பொம்மை இருக்கும். அதற்கு கீழே சுற்றப்பட்டிருக்கும் ரோஸ் நிற மிட்டாயை வாகாய் இழுத்து, நாங்கள் கேட்கும் வாட்சாகவோ,வளையலாகவோ, பறவையாகவோ கையில் ஒட்டி விடுவான்.கடைசியில் கொஞ்சமாய் நெற்றியிலும் ஒட்டியும் விடுவான்.

வண்ண பலூனை தட்டிகளில் கட்டிக்கொண்டு,பலூனைக் கைகளால் தேய்த்து சப்தமெழுப்பியபடி வரும் பலூன்காரனைக் கண்டால் குழந்தைகளுக்குக் கொண்டாட்டம். பலூன் வாங்குகிறோமோ இல்லையோ அவன் சுமந்து வரும் வண்ண பலூன்களைப் பார்ப்பதில் அவ்வளவு ஒரு மகிழ்ச்சி எங்களுக்கு.

அடுத்து, வீட்டு வாசலுக்கு வரும் பூம்பூம் மாட்டுக்காரன். பல வண்ண துணிகளில் அலங்கரிக்கப்பட்ட மாட்டோடு இவன் தெருவில் நுழையும் போதே களை கட்டும் தெரு. அவன் சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் மாட்டை, சிறுவர்களான நாங்கள் ஆர்வத்தோடு கூடி நின்று பார்ப்போம்.

நல்ல காலம் பொறக்குது! நல்ல காலம் பொறக்குது!என்று விடியற்காலையில் குறி சொல்லும் குடுகுடுப்பைக்காரனை அவ்வளவு தைரியமாய் நாங்கள் பார்த்ததேயில்லை. மையிட்டு பிள்ளைகளை மயக்கி அழைத்துச் சென்றுவிடுவான் என்று எங்களை எச்சரிப்பார்கள் அம்மாக்களும் பாட்டிகளும். பழந்துணிகளை அவனுக்கு தானமாய் கொடுத்த அன்று இரவு, தன்னையறியாமல் இடுகாட்டைத் நோக்கிச் சென்ற பெண்ணை உதாரணமாகக் காட்டி பேசிக்கொள்வார்கள்.

இவர்களையெல்லாம் இப்போது கிராமத்தில் கூட பார்க்க முடிவதில்லை. என் பிள்ளைகள் இவற்றையெல்லாம் இழந்துவிட்டார்கள் என்ற ஆதங்கம் எனக்குள் மேலோங்குகிறது.

அதே போல பள்ளி வாசலில் சாக்குப்பை விரித்து அதில் மாங்காய் துண்டுகளையும், கமர்கட், கடலை உருண்டை, தேங்காய் மிட்டாய் போன்ற வஸ்துகளை விற்பார் ஒரு பாட்டி. அவரைச் சுற்றி எப்போதும் பிஞ்சுக் கைகள் நீண்ட படி இருக்கும். கையிலிருக்கும் பத்து பைசாவிற்கும் நாலணாவிற்கும் மனம் நிறைய பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் அவரிடம். அதை சுவைத்தபடியே வீடு திரும்புவோம். அத்தனைக் கைகள் நீண்டாலும் பாட்டியின் கணக்கு மிகச் சரியாக இருக்கும். அவ்வப்போது கடனிலும் வாங்கிக் கொள்வோம்.

ஒருமுறை பையில் வைத்திருந்த 25 காசை தொலைத்துவிட்டிருந்தாள் என் தோழி . வீடு செல்லும் மணி அடித்தது. கேட்டைத் தாண்டும் போது நீளும் கைகளுக்கிடையே அந்த பாட்டி வியாபாரம் செய்துக் கொண்டிருந்தார். மிக உண்மையானவள் என்று நினைத்திருந்த என் தோழி காசில்லாத தன் கையை நீண்டிருந்த கைகளோடு இணைத்துக் கொண்டு,கமர்கட், கமர்கட் என்றாள். சற்று நேரம் பொறுத்து எங்கே காசு என்றார் பாட்டி. இப்பத்தான் பத்துபைசா கொடுத்தேன் என்றாள் இவள். இல்லை என்று மறுத்தார் பாட்டி.தான் கொடுத்து விட்டதாய் சாதித்த அவள், அழத் துவங்கினாள்.என்ன நினைத்தாரோ பாட்டி! சட்டென்று இரண்டு கமர்கட்டுகளை இவள் கையில் அழுத்தினார். அவர் வீட்டிலும் அவளைப் போன்ற ஒரு பேத்தி இருந்திருக்கக் கூடும்.

என்னவோ நானே பொய் சொல்லி அவரை ஏமாற்றியது போல குற்ற உணர்ச்சி நெடுநாட்களுக்கு என்னை வதைத்துக் கொண்டே இருந்தது. உங்கள் பக்கத்தில் கீழே கிடந்தது என்று பத்துகாசை அவரிடம் கொடுக்கலாமா என்று பலமுறை யோசித்திருக்கிறேன். ஆனால் கடைசி வரை அதைச் செய்யவில்லை.

இவரைப் பற்றிய நினைவைத் தூண்டிவிட்டது,கி.வா. ஜகன்னாதனின் மிட்டாய்க்காரன் என்ற சிறுகதை. இந்தக் கதையில் வரும் முனுசாமி ஒரு மிட்டாய்காரன்.பள்ளிக் குழந்தைகளே அவனது முக்கிய வாடிக்கையாளர்கள். விடுமுறை நாட்களில் அவனது வியாபாரம் மந்தமாகிவிடும். அதனால் அவன் விடுமுறைகளை வெறுக்கிறான்.

விடுமுறை முடிய ஒரு வாரம் இருக்கும் போது அவன் கடன் வாங்கி சக்கரை, எள், தேங்காய் போன்ற பண்டங்களை வாங்கி மிட்டாய்களை தயாரிக்கிறான். பள்ளிக்கூடம் திறக்கும் தினத்தன்று வண்ணத்தாள்களில் சுற்றிய மிட்டாகளைத் தட்டில் வைத்து கடவுளைக் கும்பிட்ட பின் சாப்பிடச் செல்கிறான். அவன் கவனிக்காத நேரம் அவனுடைய குழந்தை தட்டிலிருந்த மிட்டாயை சுவைத்து விடுகிறது.

முனுசாமி குழந்தை தன் தரித்திரம் பிடித்த கையால் மிட்டாயைத் தொட்டுவிட்டது என்று கோபத்தில் அறைந்துவிடுகிறான். உயிர் துடிக்க அலறும் குழந்தையை சட்டை செய்யாமல் வியாபாரத்திற்கு கிளம்புகிறான்.

வழியில் அவன் கல் தடுக்கி கீழே விழுகிறான்.தட்டிலிருந்த மிட்டாய்கள் அனைத்தும் சாக்கடையில் கொட்டிவிடுகிறது.அவனது மனதிற்கு குழந்தையை அடித்ததால் கடவுள் கொடுத்த தண்டனை இது என்று படுகிறது. அன்றிலிருந்து தன் குழந்தைக்கு தான் முதல் மிட்டாய் என்று முடிவு செய்துக் கொள்கிறான். குழந்தையை முத்தமிட்டு தன் மனமாறுதலை தெரிவிக்கிறான்.

இந்தக் கதையைப் படிக்கும் போது கடந்த காலத்தில் நானறிந்த அந்த மிட்டாய் பாட்டி கண் முன்னே வந்து சென்றார். சென்னையின் நடுப்பகுதியில் அமைந்திருக்கும் எங்கள் வசிப்பிடம் ,இவரைப் போன்ற சிறுதொழிலாளிகளையெல்லாம் ஓரம் ஒதுக்கிவிட்டு தன்னை புதுப்பித்துக் கொண்டது. இருந்தாலும் இவர்கள் என் மனதில் பசுமையாய் பதிந்திருக்கிறார்கள்.என் பிள்ளைகளுக்கு இவர்களையெல்லாம் அறிமுகப் படுத்த மனம் பரபரக்கிறது.என்றாவது கனவில் இவர்கள் தோன்றும் போது, இவர்களை நேரில் பார்த்துவிட மனம் துடிக்கிறது. தூக்கம் தொலைந்து போகும் அந்த இரவுகளில் கண்களில் வழியும் நீருடன் கரைந்து போகிறது மனமும்.

சிறுவயதில் கைபிடித்து
நடந்து வந்த அப்பா வேண்டும்
அந்த நேரம் தெருவோரம்
நிறைந்திருந்த மரங்கள் வேண்டும்

மீண்டும் ஒருமுறை முதலிலிருந்து
ஏ பி சி டி படிக்க வேண்டும்
பிரம்பெடுத்து மனதொடித்த
ஆசிரியரின் வகுப்பும் வேண்டும்

நண்பர்களுடன் விளையாடிய
வெற்றுவெளி திடலும் வேண்டும்
பேய்கதைகள் பேசிபயந்த
மின்சாரமற்ற இரவு வேண்டும்

இரண்டு அறைகள் மட்டுமிருந்த
கூரை வேய்ந்த வீடு வேண்டும்
வீட்டின் மேலே படர்ந்து சென்ற
பூசணிக் கொடியும் வேண்டும்

கையிலெனக்கு வாட்ச் கட்டிய
ஜவ்வுமிட்டாய் காரன் வேண்டும்
அந்த நேரம் தலைக்கு மேலே
பறந்து சென்ற குருவி வேண்டும்

புத்தகமும் கணினியுமே
வாழ்க்கையென கொண்டிருக்கும்
பிள்ளைகளுக்கு இவையனைத்தையும்
ஒருமுறையாவதுகாட்டவேண்டும்