7.5.13

பிரிவு


                   வேதா!’ என்ற கணவனின் குரல் எதிர்பாராத ஆச்சர்யத்தைக் கொடுத்தது. வேலை விஷயமாக இந்தோனேஷியா சென்றவன் ஒருநாள் முன்பே திரும்புவான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.

  பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணி புரிந்துக் கொண்டிருக்கும் அவன் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையாவது வெளிநாடுகளுக்கு செல்வது வழக்கம். ஆரம்பத்தில் அவனது பிரிவு அவளுக்கும் குழந்தைக்கும் சிரமமாயிருந்தது. மாதங்கள் செல்ல செல்ல பழகிப் போனது. சிங்கப்பூரில் இல்லாத நாட்களை, இருக்கும் நாட்களில் ஈடு செய்து விடுவான் அவன்.

  ஒவ்வொரு வாரயிறுதியிலும்  கண்டிப்பாய் வெளியே அழைத்துச் சென்று விடுவான். ஒன்பது வருடங்கள் தவமிருந்து பெற்ற குழந்தை அபிநயா மீது அவனுக்கு அளவு கடந்த ஆசை. அபிநயாவிற்கும் தாயை விட தந்தையின் மீது கூடுதல் பாசம் இருந்தது. அவன் ஊரில் இல்லாத நாட்களில் உள்ளுக்குள்ளேயே வைத்துக் கொண்டிருப்பாளாயிருக்கும்! அவனைப் பார்த்த அந்த நொடி வேகமான மூச்சிறைப்புடன் கைகால்கள் பரபரக்க தாவிச் செல்வாள்.

இப்போதும் அவன் குரல் கேட்டால் எழுந்து ஓடி வந்துவிடுவாள்.

கையில் பெட்டியோடு கூடத்தில் நின்று கொண்டிருந்தவனைப் பார்க்க சந்தோஷமாய் இருந்தது வேதாவிற்கு.

நாளைக்கு காலையில தான வரதா சொன்னீங்க! எப்படி இவ்வளவு சீக்கிரம்?” என்றபடியே நெருங்கிய போது தான் கணவனின் முகம் கலங்கி இருந்ததை கவனித்தாள். கைகளில் ரத்தக் கறையைப் போல . . .

பதற்றத்தோடு வேகமாய் அருகில் செல்ல, “போய்ட்டு வரேன்மா!” என்ற சொல்லோடு அவனது உருவம் மறைந்து போனது. 

அந்த அறை முழுவதும் சில்லிட்டுப் போனதை பதற்றத்தோடு உணர்ந்தாள்.

குளிர் விரல் நுனியில் தொடங்கி அவளது உடலெங்கும் பரவியது. பறக்கத் தயாரான பறவையைப் போல மயிர்க்கால்கள் சிலிர்த்து நின்றன. கடிகாரத்தின் பச்சை முட்கள் மணி ஒன்று இருபதைக் காட்டின. அப்போது தான், தான் அறையின் விளக்கை இன்னும் உயிர்ப்பிக்க வில்லை என்பதை உணர்ந்தாள். எப்படி அவ்வளவு துல்லியமாய் தன்னால் பார்க்க முடிந்தது! 

ஜன்னல் வழியாக பக்கத்து புளோக்கின் மின்விளக்குகள் சோகையாய் தெரிந்தன. மின்விசிறியின் தடக் தடக்கைத் தவிர காதை உறுத்தும் நிசப்தம் மட்டுமே. அபிநயா தூக்கத்தில் எதற்காகவோ சிரித்தது ஜன்னல் வழியாக வந்த மங்கிய ஒளியில் தெரிந்தது.

வேதாவுக்கு துர்சொப்பனம் கண்ட பதைபதைப்பு லேசில் அடங்கவில்லை. கடவுளை மனதிற்குள் நினைத்தபடி தண்ணீரைக் குடித்து விட்டு படுத்தாள்.

சரியாக இரண்டு பத்திற்கு தொலைபேசி நிசப்தத்தை கிழித்தபடி அலறியது.
(கதைக் களத்தில் மூன்றாம் பரிசு வென்ற குறுங்கதை)
(சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திய முத்தமிழ் விழா சிறுகதைப் போட்டியில் என் சிறுகதை 'ஆலம் விழுது' இரண்டாம் பரிசு பெற்றது.)

11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பயமாக இருக்குங்க...

ஸ்ரீராம். said...

என்னது... அதானா? திருப்பம் எல்லாம் எதுவும் கிடையாதா? மனம் திருப்பத்தை எதிர்பார்க்கிறதே...

//குளிர் விரல் நுனியில் தொடங்கி அவளது உடலெங்கும் பரவியது. // என்று தொடங்கும் பாரா உணர்வையும் பதட்டத்தையும் அழகாகச் சொல்கிறது.

அப்பாதுரை said...

பிரமாதம். ஒஹென்றிப் பாணியில் அதைவிட அற்புதமாக.

HVL said...

மிக்க நன்றி ஸ்ரீராம், திண்டுகல் தனபாலன்.
@ அப்பாதுரை
உயர்வு நவிற்சியா வஞ்சப் புகழ்ச்சியான்னு யோசிச்சுகிட்டு இருக்கேன்!

அப்பாதுரை said...

100% அக்மார்க் அசல் புகழ்ச்சிங்க. (மத்த இரண்டுக்கும் அகராதியைப் பார்த்து பொருள் தெரிஞ்சுக்கிட்டு வரேன்)

HVL said...

அப்படியா சொல்றீங்க! (என்னை வச்சு காமெடி கீமெடி . . . ச்சே ச்சே அப்பாதுரை சார் அப்படியெல்லாம் பண்ண மாட்டார்!)
மிக்க நன்றி!

இராஜராஜேஸ்வரி said...

கதைக் களத்தில் மூன்றாம் பரிசு வென்ற குறுங்கதை)--பாராட்டுக்கள்..

HVL said...

மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி!

Ra. Somasundaram said...

ஹேமா அக்கா, இப்போதுதான் உங்கள் ப்ளாக்கில் உள்ளவற்றை படித்துக் கொண்டிருக்கிறேன். பிரிவு கதை மனதில் நிற்கிறது. ஆலம் விழுது கதை கண்டிப்பாக நான் படிக்க வேண்டும். எந்த லிங்கில் அக்கா இருக்கிறது?

HVL said...

மிக்க நன்றி சோமசுந்தரம். இன்னும் ஆலம் விழுது சிறுகதையை பதிவேற்றவில்லை. என் மற்ற சிறுகதைகள்
riviyah.blogspot.com
என்ற வலைப்பக்கத்தில் இருக்கின்றன

Geetha Sambasivam said...

படிச்சதும் மனம் பதைத்தது. ஆலம் விழுதுக்காகக் காத்திருக்கேன்.

எங்கள் ப்ளாகில் இருந்து வந்தேன். இங்கே வந்தால் ஒரு புதையலே கிடைச்சிருக்கு. நன்றி.