3.6.13

சிறுகதையின் வழி கடந்த கால நினைவுகள்

Old parliment house (Singapore) ல் இருக்கும் Art Houseல் Nostalgic memories through short stories என்ற தலைப்பில் என்னுரை(படம்  கூகுளிலிருந்து)எல்லா ஊர்களையும் போல எங்கள் வசிப்பிடத்திலும் ஒரு பெரிய தண்ணீர் தொட்டி இருந்தது. எங்கோ பிடிக்கும் சங்கு,அந்த பக்கத்திலிருந்து தான் கேட்கும். அப்போதிருந்தது பூசணிக் கொடி படர்ந்த ஓர் ஓட்டு வீடு, இளமையான அம்மா,அப்பா. மற்ற நாட்களில் மிடுக்குடன் பேண்ட் சட்டையுடுத்தி சைக்கிளில் வேலைக்கு செல்லும் அப்பா, ஓய்வு நாட்களில் லுங்கியோடு சைக்கிளை துடைத்துக் கொண்டிருப்பார். வானொலி பிரபலமான ஹிந்தி பாடல்களைப் பாடிக் கொண்டோ அல்லது ஆகாசவாணியின் செய்தி அறிக்கையை வாசித்துக் கொண்டோ இருக்கும்.

அந்த நேரம் தெருவில் ஐஸ் வண்டிகாரன் அமுக்கும் ஹாரனின் ஒலி முதலில் கேட்கும்.பின் பாலேஸ், கப்பேஸ் சேமியா ஏஸ் என்ற குரலுடன் தெருவிற்குள் நுழைவார் அவர். அவர் தள்ளி வரும் சக்கரம் வைத்த செவ்வகப் பெட்டிக்குள் எங்கள் கனவுப் பொருட்கள் இருக்கும். ஆரஞ்ச்,மேங்கோ, க்ரேப் குச்சி ஐஸ்களை தின்று விட்டு,கலர் நாக்கிலும் உதட்டிலும் நன்றாக ஒட்டியிருக்கிறதா என்று எங்களுக்குள் சரிபார்த்துக் கொள்வோம்.

அதே போல, ஜல் ஜல் என்று சலங்கைகள் சப்திக்க வரும் ஜவ்வு மிட்டாய்க்காரன் மிகப் பிரசித்தம் எங்கள் தெருவில். அவனது மூங்கில் கழியின் உச்சியில் பொம்மை இருக்கும். அதற்கு கீழே சுற்றப்பட்டிருக்கும் ரோஸ் நிற மிட்டாயை வாகாய் இழுத்து, நாங்கள் கேட்கும் வாட்சாகவோ,வளையலாகவோ, பறவையாகவோ கையில் ஒட்டி விடுவான்.கடைசியில் கொஞ்சமாய் நெற்றியிலும் ஒட்டியும் விடுவான்.

வண்ண பலூனை தட்டிகளில் கட்டிக்கொண்டு,பலூனைக் கைகளால் தேய்த்து சப்தமெழுப்பியபடி வரும் பலூன்காரனைக் கண்டால் குழந்தைகளுக்குக் கொண்டாட்டம். பலூன் வாங்குகிறோமோ இல்லையோ அவன் சுமந்து வரும் வண்ண பலூன்களைப் பார்ப்பதில் அவ்வளவு ஒரு மகிழ்ச்சி எங்களுக்கு.

அடுத்து, வீட்டு வாசலுக்கு வரும் பூம்பூம் மாட்டுக்காரன். பல வண்ண துணிகளில் அலங்கரிக்கப்பட்ட மாட்டோடு இவன் தெருவில் நுழையும் போதே களை கட்டும் தெரு. அவன் சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் மாட்டை, சிறுவர்களான நாங்கள் ஆர்வத்தோடு கூடி நின்று பார்ப்போம்.

நல்ல காலம் பொறக்குது! நல்ல காலம் பொறக்குது!என்று விடியற்காலையில் குறி சொல்லும் குடுகுடுப்பைக்காரனை அவ்வளவு தைரியமாய் நாங்கள் பார்த்ததேயில்லை. மையிட்டு பிள்ளைகளை மயக்கி அழைத்துச் சென்றுவிடுவான் என்று எங்களை எச்சரிப்பார்கள் அம்மாக்களும் பாட்டிகளும். பழந்துணிகளை அவனுக்கு தானமாய் கொடுத்த அன்று இரவு, தன்னையறியாமல் இடுகாட்டைத் நோக்கிச் சென்ற பெண்ணை உதாரணமாகக் காட்டி பேசிக்கொள்வார்கள்.

இவர்களையெல்லாம் இப்போது கிராமத்தில் கூட பார்க்க முடிவதில்லை. என் பிள்ளைகள் இவற்றையெல்லாம் இழந்துவிட்டார்கள் என்ற ஆதங்கம் எனக்குள் மேலோங்குகிறது.

அதே போல பள்ளி வாசலில் சாக்குப்பை விரித்து அதில் மாங்காய் துண்டுகளையும், கமர்கட், கடலை உருண்டை, தேங்காய் மிட்டாய் போன்ற வஸ்துகளை விற்பார் ஒரு பாட்டி. அவரைச் சுற்றி எப்போதும் பிஞ்சுக் கைகள் நீண்ட படி இருக்கும். கையிலிருக்கும் பத்து பைசாவிற்கும் நாலணாவிற்கும் மனம் நிறைய பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் அவரிடம். அதை சுவைத்தபடியே வீடு திரும்புவோம். அத்தனைக் கைகள் நீண்டாலும் பாட்டியின் கணக்கு மிகச் சரியாக இருக்கும். அவ்வப்போது கடனிலும் வாங்கிக் கொள்வோம்.

ஒருமுறை பையில் வைத்திருந்த 25 காசை தொலைத்துவிட்டிருந்தாள் என் தோழி . வீடு செல்லும் மணி அடித்தது. கேட்டைத் தாண்டும் போது நீளும் கைகளுக்கிடையே அந்த பாட்டி வியாபாரம் செய்துக் கொண்டிருந்தார். மிக உண்மையானவள் என்று நினைத்திருந்த என் தோழி காசில்லாத தன் கையை நீண்டிருந்த கைகளோடு இணைத்துக் கொண்டு,கமர்கட், கமர்கட் என்றாள். சற்று நேரம் பொறுத்து எங்கே காசு என்றார் பாட்டி. இப்பத்தான் பத்துபைசா கொடுத்தேன் என்றாள் இவள். இல்லை என்று மறுத்தார் பாட்டி.தான் கொடுத்து விட்டதாய் சாதித்த அவள், அழத் துவங்கினாள்.என்ன நினைத்தாரோ பாட்டி! சட்டென்று இரண்டு கமர்கட்டுகளை இவள் கையில் அழுத்தினார். அவர் வீட்டிலும் அவளைப் போன்ற ஒரு பேத்தி இருந்திருக்கக் கூடும்.

என்னவோ நானே பொய் சொல்லி அவரை ஏமாற்றியது போல குற்ற உணர்ச்சி நெடுநாட்களுக்கு என்னை வதைத்துக் கொண்டே இருந்தது. உங்கள் பக்கத்தில் கீழே கிடந்தது என்று பத்துகாசை அவரிடம் கொடுக்கலாமா என்று பலமுறை யோசித்திருக்கிறேன். ஆனால் கடைசி வரை அதைச் செய்யவில்லை.

இவரைப் பற்றிய நினைவைத் தூண்டிவிட்டது,கி.வா. ஜகன்னாதனின் மிட்டாய்க்காரன் என்ற சிறுகதை. இந்தக் கதையில் வரும் முனுசாமி ஒரு மிட்டாய்காரன்.பள்ளிக் குழந்தைகளே அவனது முக்கிய வாடிக்கையாளர்கள். விடுமுறை நாட்களில் அவனது வியாபாரம் மந்தமாகிவிடும். அதனால் அவன் விடுமுறைகளை வெறுக்கிறான்.

விடுமுறை முடிய ஒரு வாரம் இருக்கும் போது அவன் கடன் வாங்கி சக்கரை, எள், தேங்காய் போன்ற பண்டங்களை வாங்கி மிட்டாய்களை தயாரிக்கிறான். பள்ளிக்கூடம் திறக்கும் தினத்தன்று வண்ணத்தாள்களில் சுற்றிய மிட்டாகளைத் தட்டில் வைத்து கடவுளைக் கும்பிட்ட பின் சாப்பிடச் செல்கிறான். அவன் கவனிக்காத நேரம் அவனுடைய குழந்தை தட்டிலிருந்த மிட்டாயை சுவைத்து விடுகிறது.

முனுசாமி குழந்தை தன் தரித்திரம் பிடித்த கையால் மிட்டாயைத் தொட்டுவிட்டது என்று கோபத்தில் அறைந்துவிடுகிறான். உயிர் துடிக்க அலறும் குழந்தையை சட்டை செய்யாமல் வியாபாரத்திற்கு கிளம்புகிறான்.

வழியில் அவன் கல் தடுக்கி கீழே விழுகிறான்.தட்டிலிருந்த மிட்டாய்கள் அனைத்தும் சாக்கடையில் கொட்டிவிடுகிறது.அவனது மனதிற்கு குழந்தையை அடித்ததால் கடவுள் கொடுத்த தண்டனை இது என்று படுகிறது. அன்றிலிருந்து தன் குழந்தைக்கு தான் முதல் மிட்டாய் என்று முடிவு செய்துக் கொள்கிறான். குழந்தையை முத்தமிட்டு தன் மனமாறுதலை தெரிவிக்கிறான்.

இந்தக் கதையைப் படிக்கும் போது கடந்த காலத்தில் நானறிந்த அந்த மிட்டாய் பாட்டி கண் முன்னே வந்து சென்றார். சென்னையின் நடுப்பகுதியில் அமைந்திருக்கும் எங்கள் வசிப்பிடம் ,இவரைப் போன்ற சிறுதொழிலாளிகளையெல்லாம் ஓரம் ஒதுக்கிவிட்டு தன்னை புதுப்பித்துக் கொண்டது. இருந்தாலும் இவர்கள் என் மனதில் பசுமையாய் பதிந்திருக்கிறார்கள்.என் பிள்ளைகளுக்கு இவர்களையெல்லாம் அறிமுகப் படுத்த மனம் பரபரக்கிறது.என்றாவது கனவில் இவர்கள் தோன்றும் போது, இவர்களை நேரில் பார்த்துவிட மனம் துடிக்கிறது. தூக்கம் தொலைந்து போகும் அந்த இரவுகளில் கண்களில் வழியும் நீருடன் கரைந்து போகிறது மனமும்.

சிறுவயதில் கைபிடித்து
நடந்து வந்த அப்பா வேண்டும்
அந்த நேரம் தெருவோரம்
நிறைந்திருந்த மரங்கள் வேண்டும்

மீண்டும் ஒருமுறை முதலிலிருந்து
ஏ பி சி டி படிக்க வேண்டும்
பிரம்பெடுத்து மனதொடித்த
ஆசிரியரின் வகுப்பும் வேண்டும்

நண்பர்களுடன் விளையாடிய
வெற்றுவெளி திடலும் வேண்டும்
பேய்கதைகள் பேசிபயந்த
மின்சாரமற்ற இரவு வேண்டும்

இரண்டு அறைகள் மட்டுமிருந்த
கூரை வேய்ந்த வீடு வேண்டும்
வீட்டின் மேலே படர்ந்து சென்ற
பூசணிக் கொடியும் வேண்டும்

கையிலெனக்கு வாட்ச் கட்டிய
ஜவ்வுமிட்டாய் காரன் வேண்டும்
அந்த நேரம் தலைக்கு மேலே
பறந்து சென்ற குருவி வேண்டும்

புத்தகமும் கணினியுமே
வாழ்க்கையென கொண்டிருக்கும்
பிள்ளைகளுக்கு இவையனைத்தையும்
ஒருமுறையாவதுகாட்டவேண்டும்