11.7.13

கைத்தொலைப்பேசியும் நானும்


பாம்பு 1, பாம்பு 2 க்கு போன் செய்ததாம். போனை எடுக்காமலேயே, தனக்கு ஒரு பாம்பு தான் போன் செய்கிறது, என்று பாம்பு 1 கண்டுபிடித்து விட்டதாம். எப்படி? (அப்போதெல்லாம் காலர் ஐ.டி பிரபலம் இல்லை)
இப்படி கேள்வி கேட்டு கடிக்கும் போதெல்லாம் யோசித்ததில்லை, கைத் தொலைபேசி இவ்வளவு பிரபலமாகும் என்று. அப்போது வீட்டுத் தொலைபேசிகளே மிகப் பெரிய அதிசயம். அவற்றை திரைப்படத்தில் பெரிய பணக்காரர்களின் வீடுகளில் மட்டுமே பார்த்திருந்தேன்.

பிறகு,  தொன்னூறுகளின் கடைசியில் கைத் தொலைப்பேசி அறிமுகமான போது கூட அது எங்களது நம்பிக்கையை அவ்வளவு சீக்கிரம் பெற்றுவிடவில்லை. அது பொருளாதார பிரச்சனைகளை உருவாக்கக் கூடும் என்ற சந்தேகம் இருந்துக் கொண்டே இருந்தது. ஆனால் எங்களின் நம்பகத்தன்மையைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், மிகவேகமாய் இந்திய மக்களின் வாழ்க்கையில் ஊடுறுவத் துவங்கியது கை.தொ. பேசி.

முட்டை வெந்து போவது போல மூளை வெந்து போய்விடுமாம்!’ என்ற கதைகளையெல்லாம் மீறி ஒரு மனிதனின் ஸ்டேடஸ் சிம்பலாக மாறிப் போனது. வீட்டை விட்டு வெளியே போகும் கணவரின் இருப்பிடத்தை அறிந்துக் கொள்ளும் வசதி, வரேன் . . . வரேன் . . . வந்துகிட்டே இருக்கேன் . . . வந்துவிட்டேன், என்று வீட்டிலிருந்தே சொல்லும் வசதி மற்றும் இன்னபிற வசதிகளுக்காக செல்பேசி மெல்ல மெல்ல எங்கள் வீட்டினுள் நுழைந்து கைப்பையில் இடம் பிடித்தது.

இப்போது பர்ஸ் தொலைந்து போனால்அட்டே! போனை அதனுள்ளே வைக்காமல் போனோமே!’ என்று சலித்துக் கொள்கிறேன்.
ஆரம்பத்தில் மிஸ்டு கால்களை வேறு விதமாகவும் உபயோகப்படுத்திக் கொண்டோம் நாங்கள். நான் வேலையில் பிஸியாக இருக்கும் போது  வீட்டிலிருந்து

·         ஒரு மிஸ்டு கால் வந்தால் என் பெண் நம்பர் 1 வீட்டிற்கு வந்துவிட்டாள் என்று அர்த்தம்.

·         இரண்டு மிஸ்டு கால் வந்தால்பெண் நம்பர் 2 வந்துவிட்டாள்

·         மூன்று மிஸ்டு கால் ((2+1) அல்லது (1+2)) என்றால் இருவரும் சுகமாய் வந்து சேர்ந்துவிட்டார்கள்.

·         நான்கு மிஸ்டு கால்- ‘அம்மா! உன்னோடு பேச வேண்டும் போனை எடு

கை. தொ. பேசியால் வேறு சில வசதிகளும் உண்டு.

சில மெகா அறுவைகளிடம் மறக்காமல் போன் நம்பரை வாங்கி வைத்துக் கொள்வேன் நான், அடித்தால் கண்டிப்பாய் எடுக்கக்கூடாது என்பதற்காக. அதற்காக அவர்கள் உறவை முறித்துக் கொள்வேன் என்பதும் இல்லை. நான் பிஸியாகப் போகும் ஐந்து நிமிடங்களுக்கு முன்னால் போன் செய்து, ஓரிரு நிமிடங்கள் பேசிவிட்டு வைத்து விடுவேன்.

 என் தோழி ஒருவர் போனில் மிக சுவாரஸ்யமாய் பேசுவார். சில சமயங்களில் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக கூட பேசியிருக்கிறோம். சந்தித்து நெடு நாட்களாகிவிட்டதே என்று ஒரு முறை அவர் வீட்டிற்கு சென்றேன். நான் அங்கே இருந்ததில் பாதி நேரம், அவர் போனிலேயே தான் பேசிக் கொண்டிருந்தார்.

சரி! இவரோடு போனிலேயே பேசிக்கொள்ளலாம் என்று வந்து விட்டேன். பேனா நண்பர்கள் வழக்கொழிந்து போய், இது போன்ற போன் நண்பர்கள் தற்போது அதிகமாகிவிட்டார்கள்.

 முன்பிருந்த பார்ன்  வித் சில்வர் ஸ்பூன்போல, இப்போதுள்ள பிள்ளைகள் எல்லாம்பார்ன் வித் நோக்கியா போன்ஆகிவிட்டார்கள்.

 இவர் மற்றொரு தோழி. இவருக்கு எப்போது போன் செய்தாலும், அவரது மூன்று வயது பெண் தான் எடுப்பாள். கொஞ்ச நேரம் பேசி விட்டு, அம்மாவிடம் கொடு என்றால், ஏடாகூடமாய் ஏதாவது கேள்வியைக் கேட்டு, அதற்கு பதில்  சொல்ல வில்லையென்றால் கொடுக்க மாட்டேன் என்பாள். தோழியுடன் பேசுகிறேனா இல்லையா என்பது அந்த சிறுமியின் அப்போதைய மனநிலையைப் பொறுத்தது. சில முறை வெறுத்துப் போய் தோழியுடன் பேசாமலேயே போனை வைத்திருக்கிறேன்.

 இதைக் நேரே சொன்ன போது தோழி பெருமையாய் சிரித்துக் கொண்டார். அது மட்டுமல்லாது அவளது மற்ற பிரதாபங்களையும் சொல்லத் தொடங்கிவிட்டார். அது பின்வருமாறு:

 ஒரு முறை போன் தொலைந்து போக, மிஸ்டு கால் கொடுத்து பார்த்திருக்கிறார்கள். ரிங் போகிறதே தவிர போன் எங்கே என்று கண்டு பிடிக்க முடியவில்லை. அதை வைத்து விளையாடிமகள் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறாள். எழுந்த பிறகு போனை ப்ரிட்ஜிலிருந்து எடுத்துக் கொடுத்திருக்கிறாள்.

மற்றொரு முறை போனை வாஷிங் மெஷினில் துவைத்த துணிகளோடு கண்டுபிடித்திருக்கிறார்கள்.

 இப்படி, போன் சில நேரங்களில் நம் பிள்ளை வளர்ப்பு முறைகளைரிங்போட்டு காட்டுகிறது.

போன்ஆல் பிள்ளைகள் கெடுகிறார்களா, அல்லது பிள்ளைகள் போனைக் கெடுக்கிறார்களா என்று பட்டிமன்றம் வைக்கலாம் போல!

ஆனாலும், வாழ்க்கையில் இடக்கை, வலக்கையை விட முக்கியமாய் போன, பாழாய் போன செல்போன் இல்லையென்றால்  வேலை ஓடவில்லையே! என்ன செய்வது?

 ஆரம்பத்தில் கேட்டிருந்த கேள்விக்கான விடை உங்களுக்கு தெரிந்திருக்கக் கூடும்,

பாம்பின்கால்பாம்பறியும்

(ஜீலை மாத கதைக்கள போட்டிக்கான தொடக்க வரி
"அதிகாலை மூன்று மணி இருக்கும். எனக்குள் இருந்த மிருகம் விழித்துக் கொண்டது . . .".
இதற்கு நான் அனுப்பிய குறுங்கதை அடுத்த பதிவில்)
 

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இத்தனை உபயோகம் இன்று அறிந்து கொண்டேன்...!

ஸ்ரீராம். said...

பேஜர் மறைந்து, அலைபேசி வந்த புதிதில் எனக்குப் பரிசாகக் கிடைத்த அலைபேசியை உபயோகப் படுத்த ரொம்பக் கூச்சப் பட்டிருக்கிறேன். இப்போது பழகி விட்டது. மிஸ்ட் கால் வசதி உட்பட பலவற்றையும் நாங்களும் இப்படிச் சொல்ல செலவில்லாமல் உபயோகப் படுத்திக் கொள்கிறோம்!

இராஜராஜேஸ்வரி said...

போன் சில நேரங்களில் நம் பிள்ளை வளர்ப்பு முறைகளை ‘ரிங்’ போட்டு காட்டுகிறது.

பொன்னான போன் ஆக்கம் ..!

HVL said...

மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி, ஸ்ரீராம், திண்டுகல் தனபாலன்

Ranjani Narayanan said...

அட! மிஸ்டு கால்களில் இவ்வளவு செய்திகளா?
நான் எனக்கு வரும் சில அழைப்புகளை 'குப்பை', 'குப்பை -1', 'குப்பை - 2' என்று சேமித்து வைப்பேன். அழைப்பு வந்தால் அப்படியே கட் செய்துவிடுவேன்.
புதிர் சூப்பர்!

கோமதி அரசு said...

முன்பிருந்த ‘பார்ன் வித் சில்வர் ஸ்பூன்’ போல, இப்போதுள்ள பிள்ளைகள் எல்லாம் ‘பார்ன் வித் நோக்கியா போன்’ ஆகிவிட்டார்கள்.//

உண்மைதான்,எங்களை போன்றவர்களை விட அவர்களுக்கு நிறைய விஷயங்கள் அதில் தெரிகிறது.