31.8.13

விடுதலை


அதிகாலை மூன்று மணி இருக்கும். எனக்குள் இருந்த மிருகம் விழித்துக் கொண்டது. நாக்கு வரண்டது. இதயம்அதைக் கொடு! அதைக் கொடு!’ என்று வேகமாய் அடித்தது. கைகள் தன்னிச்சையாய் நடுங்கின. ஏழு வருடங்களாய்  உயிர் மூச்சிலே கலந்திருந்த போதையை, என் உடலிலிருந்த சகல பாகங்களும் தேடத் தொடங்கின . கொஞ்சம் கொஞ்சமே கொஞ்சம், இருந்தால் போதும். அனைத்தும் என் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும்.

மெத்தைக்கு அடியில், தொலைக்காட்சி பெட்டிக்குப் பின்னே, புத்தகங்களுக்கு இடையே  என்று சகல இடங்களையும் வெறித்தனமாய் தேடத் தொடங்கினேன்.  இந்த சனியனை விட்டுத் தொலைய வேண்டும் என்று கடந்த ஒரு மாதமாய் எவ்வளவு பாடு! உள்ளே  அலறிக் கொண்டிருக்கும் மனதை எத்தனை முறை வெற்றிக் கொள்வது. வேண்டாம்! இதோடு தான் வாழ வேண்டும் என்றால், வாழ்ந்து தொலைக்கிறேன்! நீலச் சட்டைக்காரர்கள் பிடித்துச் செல்வார்கள். அம்மா அழுவாள். அதை பிறகு பார்த்துக் கொள்ளலாம். அனைத்துப் பொருட்களையும் வேகமாய் கலைத்துப் போடத் துவங்கினேன்.

கடைசியாய் சிக்கிவிட்டது. ஒன்று தான். இருந்தாலும் பரவாயில்லை.  அதை  வேகமாய் எடுத்துக் கொண்டு படுக்கையில் அமர்ந்த போது, மனதினுள் மனைவியின் குரல் கேட்டது. ‘இனி என்னால உங்க கூட இருக்க முடியாது! எங்களை விட உங்களுக்கு  இது தான் பெருசாத் தோணுதுன்னா நான் கிளம்பறேன்!’ ‘அப்பா!’ என்று அழுதபடி கட்டிக் கொண்டிருந்த குழந்தையை பிடுங்கி இடுப்பில் செருகிக் கொண்டு அவள் கிளம்பிய காட்சி நினைவில் தோன்றியது. என் கால்களைத் தழுவிக் கொண்டிருந்த அந்த பிஞ்சு உடலின்  ஸ்பரிசத்தை இன்றும் என்னால் உணர முடிந்தது. இதோ இப்படி வரண்டு போயிருக்கும் என் தோலுக்கு  சற்றும் சம்பந்தமில்லாத மெத்தென்ற  பட்டு உடல் திரைப்பட கதாநாயகனைப் போல் தன் அப்பாவால் எதையும் செய்ய முடியும் என்று நம்பிக்கையோடு என்னை அவள் சுற்றி வந்த கணங்கள்... அந்த நம்பிக்கையைச் சிதைப்பதைப் போல இப்போது நான் கையில் பிடித்திருக்கும் இந்த சாத்தான். ச்சே! என்று அதை குப்பையில் எறிந்தேன். மனம் மாறிவிடப்போகிறது என்ற பயத்தில், அதை மறுபடி எடுத்து கழிப்பறைப் பீங்கானில் போட்டு ஃப்ளஷ்ஷை இழுத்து விட்டேன்.

வெரி குட், சந்திரன்! போதை மருந்தை தூக்கியெறிய முடிந்தது, உங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி! இனி உங்களால் மனதை நிச்சயமாய் அடக்க முடியும்! நீங்கள் போதையின் பிடியிலிருந்து மிக வேகமாய் வெளியேறிக் கொண்டிருக்கிறீர்கள். வாழ்த்துகள்!” என்றார் மருத்துவர். என் மகளைச் சேரும் நாட்களை மகிழ்ச்சியோடு எண்ணத் துவங்கினேன்.
(இந்தக் கதை இரண்டாம் பரிசு பெற்றது.
ஆகஸ்டு மாதத்திற்கு கொடுக்கப்பட்ட தொடக்க வரி 'மனதில் மண்டிக்கிடப்பதையெல்லாம் யாரிடமாவது கொட்டித் தீர்க்க வேண்டும் போல இருந்தது .. .' அதற்கு நான் எழுதிய கதை அடுத்த பதிவில் . . .)