22.9.13

என் கதைகள் . . .

திண்ணையில் என் கதை

http://puthu.thinnai.com/?p=22671

நேரமிருந்தால் படித்துப்பாருங்கள்.
அதிக நேரமிருந்தால் குறைநிறைகளை சொல்லுங்கள்.
முக்கியமாய் குறைகளை . . .

அடுத்து முறையே செப்டம்பர் மற்றும் ஆகஸ்டு  மாத கதை களத்தில் முதல் பரிசு பெற்ற என் குறுங்கதைகள் . . .

(அப்பா துரை ஸார் மன்னித்துக் கொள்ளுங்கள். இது போன்ற கதைகளை எழுதக் கூடாது என்று தான் பார்க்கிறேன். ஆனாலும் எழுதும்படி கேட்கும் போது முடியாது என்று சொல்ல முடியவில்லை. சரி பயிற்சியாகவாவது இருக்கட்டும் என்று. . . )


பந்தயம்
(யோசித்துப் பார்த்தால் கொஞ்சம் பைத்தியக்காரத்தனம் போல் தோன்றினாலும் அது அவனுக்குப் பிடித்திருந்தது. ....)

யோசித்துப் பார்த்தால் கொஞ்சம் பைத்தியக்காரத்தனம் போல் தோன்றினாலும் அது அவனுக்குப் பிடித்திருந்தது.

சரிடா! ராத்திரி பத்து மணிக்கு பனானா லீஃப் கிட்ட நில்லு, நான் காடில உன்னை ஏத்திக்கறேன்என்றான் குமாரிடம்.

வேணாம்டா, எனக்கு அந்த இடத்தைப் பத்தி நல்லா தெரியும்...”

இதோ பார்றா இப்பிடி பயப்படறான். போடா! போயி வீட்டில ஒளிஞ்சுக்கோ. நான் பேய் எப்படி இருந்ததுன்னு பார்த்துட்டு வந்து சொல்றேன்என்றான் கோபால்.

மண்டாய் இடுகாட்டிற்கு நடுசாமத்தில் சென்று, பேய் இல்லையென்று நிரூபிப்பதாய் ஜானிடம் பந்தயம் கட்டியிருந்தான் கோபால். போகவில்லையென்றால் நண்பர்களுக்கு நடுவே மானத்தை வாங்கிவிடுவான். வேறு வழியின்றி ஒப்புக்கொண்டான் குமார்.

நள்ளிரவில் இருவரும் மண்டாயை நோக்கி விரைந்துக் கொண்டிருந்தார்கள். குமார் முகம் வெளுத்துப்போய், அசாதாரண மௌனத்திலிருந்தான். அவன் மனதிலோடும் எண்ணங்களை கோபாலால் புரிந்துக்கொள்ள முடிந்தது.

பந்தயப் பணம் இருநூறு வெள்ளி கிடைக்கட்டும் அப்ப பார்க்கறேன் உன் முகத்தைஎன்று நினைத்துக் கொண்டான்.

மண்டாய் லேனில் காடியைத் திருப்பி ஒரு மரத்தினடியில் நிறுத்தினான் கோபால். தூரத்தில் இடுகாட்டு கட்டிடம் மரங்களுக்கிடையே பிரம்மாண்டமாய் தெரிந்தது. காற்றின் அமானுஷ்ய குளிர்ச்சியில் உடல் சிலிர்த்தது. மிக லேசாய் நெஞ்சில் பயம் கிளைக்க, சட்டைப்பையிலிருந்து சிகரெட்டை எடுத்து பற்றவைத்தான் கோபால். சிறிது தைரியம் பிறந்தது.

குமார், என்னடா இப்படி இருக்க! பேய் வரப்போகுதுன்னு பயப்படறியா? அதோ பார் அந்த கட்டிடத்துலயிருந்து வரப்போகுதா இல்லை இந்த மரத்துக்கு பின்னாலிருந்தா...” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே புகைச்சுருள் போல ஏதோவொன்று அங்கிருந்து கிளம்பியது. கோபாலுக்கு திக்கென்றது. ச்சே! சிகரெட் புகை... என்று அதைக் கைகளால் விலக்கிவிட்டான்.

உண்மையாவே பேய் இருக்குன்னு நினைக்கறியா குமாரு!”

நாம செத்த பிறகு என்னவாவோம்னு நினைக்கற”?

என்னடா சாமியார் மாதிரி பேசற! பேய் இருந்தா இத்தனை நாள் எப்படிடா என் கண்ணுல படாம இருந்திருக்கும். யீஷீன்ல கொலம்பாரியத்துக்கு பக்கத்துலேயே தான் என் வீடு தெரியும்ல...”

எல்லாத்துக்கும் முதல் தடவைன்னு ஒன்னு இருக்குடா

சரி! சரி! வேறு எதைப்பத்தியாவது பேசுஎன்று சொன்ன போது தூரத்தில் ஊளைச் சத்தம் கேட்டது.

நரியா! நாயா! அதுவும் இங்கேஎன்று யோசித்தபடியே திரும்பிய கோபாலுக்கு தூக்கி வாரிப் போட்டது.

குமார்...! எங்கேடா போயிட்ட, குமாரு...”

அவன் சட்டைப் பையிலிருந்த கைத்தொலைப்பேசி ஒலித்தது. திரையில் குமார் என்ற பெயரைப் பார்த்து திகைத்தான்.

சாரிடா! கெளம்புற நேரத்தில விஷயம் தெரிஞ்சு எங்கம்மா, போகவே கூடாதுன்னு நிறுத்திட்டாங்க! மன்னிச்சிடுடா!”

கோபாலின் முதுகுத்தண்டு சிலிர்த்தது.     

மொத்த வார்த்தைகள்: 249


பாவமன்னிப்பு
(மனதில் மண்டிக்கிடப்பதையெல்லாம் யாரிடமாவது கொட்டித்தீர்க்க வேண்டும் போல் இருந்தது.....)

மனதில் மண்டிக்கிடப்பதையெல்லாம் யாரிடமாவது கொட்டித்தீர்க்க வேண்டும் போல் இருந்தது.  ஆனால் அதனால் வரும் அவமானத்தை ஏற்றுக்கொள்ளும் துணிவு எனக்கில்லை. வேறுவழியில்லை!  தோழனாய் பழகிய அப்பாவிற்காவது என் தற்கொலைக்கான காரணம் தெரியவேண்டும்.

அப்பா! என்னை மன்னித்துவிடுங்கள்! 

போன மாதம் விளையாட்டாக தான் ஐம்பது வெள்ளியை அம்மாவின் கைப்பையிலிருந்து எடுத்தேன். யாருக்கும் தெரியாமல் அதைச் செய்ததில் இருந்த குறுகுறுப்பை மிகவும் ரசித்தேன். நண்பர்களோடு அதை செலவு செய்தபோது அவர்கள் ஆச்சர்யமாய் பார்த்தார்கள். அந்த ஆச்சர்யம் எனக்குப் பிடித்திருந்தது.

அம்மா அந்த ஐம்பது வெள்ளியைத் தேடிய போது வருத்தப்பட்டேன். ‘எங்கே திருட்டு கொடுத்தேன்னு தெரியலையே!’ என்று அவர் புலம்பிய போதுதிருட்டுஎன்ற வார்த்தை என் மனதை பலமாக தாக்கியது. ச்சே! என்ன காரியம் செய்தேன்! கேட்டால், தன் செலவைக் குறைத்துக் கொண்டாவது, மறுக்காமல் வாங்கிக்கொடுக்கும் பெற்றவரிடம் திருடியிருக்கிறேன். மனம் துடித்தது. இனி செத்தாலும் திருடுவதில்லை என்று முடிவுவெடுத்தேன்.

மறுநாள் பள்ளியில் என் முடிவு ஆட்டம் கண்டது. இடைவேளையின் போது தனக்கு இருபது வெள்ளி கொடுக்கவில்லையென்றால் ஃபேஸ்புக்கில் என் திருட்டைப் பற்றி போடுவதாய் சதீஷ் மிரட்டினான். என்னிடம் இல்லை என்று சொன்னதற்குதிருடிக் கொடுஎன்றான்.

அவனை சமாதானப்படுத்த நம் பணிப்பெண் கவிதாவின் பையிலிருந்து எடுத்தேன். அன்று கவிதா முகம் சிவக்க அழுத போது என்னையே என்னால் மன்னிக்க முடியவில்லை.

நேற்று சதீஷ் மறுபடி பேசினான். இப்போது நூறு வெள்ளிகள் வேண்டுமாம்! இந்த முறை தரப்போவதில்லை! எப்படியும் அவன் ஃபேஸ்புக்கில் இதைப் போடுவான். பள்ளியில் அனைவருக்கும் தெரிந்துவிடும். நீங்கள் எவ்வளவு வருத்தப்படுவீர்கள் என்று தெரியும். அதைப் பார்க்கும் தைரியம் எனக்கில்லை! போகிறேன்செல்வா

எழுதிய தாளை தொலைபேசிக்குக் கீழே வைத்துவிட்டு செம்பாவாங் கடற்கரையை நோக்கிச் சென்றேன். ஆனால் அங்கே சத்யா ஆன்ட்டியிடம் மாட்டிக் கொண்டேன்.

வழியில் அப்பா எதுவும் பேசவில்லை. நான் எழுதிய கடிதம் அவரிடம் இருந்தது. என்னைத் தனியாக அறைக்குள் அழைத்துச் சென்று,

செல்வா! நான் சொல்றத நீ புரிஞ்சுக்கணும். என்ன தப்பு செஞ்சிருந்தாலும் நீ என் பிள்ளை! எனக்கு உன் உயிரை விட பெருசு எதுவும் இல்லை! எனக்கு நீ தான் முக்கியம். தவறு செய்யாத மனுஷனே உலகத்தில கிடையாது! அதுக்கு வருத்தப்படறதைவிட இனி அப்படி செய்யமாட்டேன்னு உறுதியெடுத்துக்கறது தான் புத்திசாலிதனம். இனி இந்த விஷயத்தை நான் பார்த்துக்கறேன்! நீ யாரிடமும் இதைப்பற்றி பேசாதே!” என்றார்.

என் கண்களின் அனிச்சையாய் கண்ணீர் வழிந்தது.


3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துகள்...

ஸ்ரீராம். said...

முதல் கதை பழகிய திகில்! ஓரளவு எதிர்பார்க்க முடிந்தது. இரண்டாவதும் ஓகே.

அப்பாதுரை said...

நல்லாத்தான் இருக்குது கதை. இதையும் எழுதுங்க.. இதுக்கு மேலேயும் எழுதுங்க.
(மண்டாய் என்பது இடமா?)