30.8.14

விடியல்

இன்று காலை எழுந்து சமையலறைக்குள் வரும் போதே சில்லென்ற காற்று. . . பத்து மாடிக்கும் கீழே இளங்காலை இருளில் நின்றுக்கொண்டிருந்த கார்களையும், பக்கத்து எதிர் ப்ளோக்குகளின் அறைகளில் தெரிந்த வெளிச்சத் துணுக்குகளை ரசித்தபடி சோம்பேறித் தனமாய் சன்னல் கம்பிகளில் முகத்தைப் புதைத்போது காற்றோடு ஓரிரு மழைத்துளிகள் முகத்தில் மோதின. வெளியே இருந்த சிலுசிலுப்பில் மழை வலுக்கும் என்று தோன்றியது. கூடவே, அப்படி பெய்தால் வழக்கமாய் செல்லும் நடை பயிற்சி இன்று இல்லை என்று மனதிற்குள் சின்ன மகிழ்ச்சி
     நினைத்தது போல் நல்ல மழைமழைக்குள்ளாக பார்க்கும் மனித முகங்கள் எப்போதும் மகிழ்ச்சியைச் சுமந்திருக்கின்றன. மழை போர்வைக்குள்ளிருப்பவர்களை இதமான சோம்பலும், தனக்குள் இறங்குபவர்களைப் புத்துணர்ச்சியும் கொள்ள வைக்கிறது. மனிதர்கள் மழை பெய்யும் போது குளிர்ந்து காணப்படுகிறார்கள். மழை பெய்தால் எனக்குள்ளும் உற்சாகம் குடிகொண்டுவிடும்.
     மழையின் காரணமாக வழக்கமான பாதையில் செல்லாமல் மேற்கூரையிருந்த பகுதிகளின் வழியாக பேருந்து நிறுத்தம்  நோக்கி நடந்து கொண்டிருந்தேன், காதில் இளையராஜா. . . கோப்பி கடைகள் மட்டும் முழு சுறுசுறுப்பில் இயங்கிக் கொண்டிருந்தனசோங் பாங்கின் மூடியிருந்த திறக்கப்பட்டுக் கொண்டிருந்த கடைகளைக் கண்களால் அளைந்தபடி அவசரமில்லாமல் நடந்தேன்
    எனக்கு முன் நெட்டையான மனிதர் ஒருவர் ப்ளாஸ்டிக் பையில் இருந்த கோப்பியை ஸ்ட்ராவால் உறிஞ்சியபடி சென்றுக் கொண்டிருந்தார். எந்த நாட்டவர் என்று சரியாக தெரியவில்லை. நிச்சயம் தமிழர் இல்லை. உறுதியான உடற்கட்டைப் பார்க்கும் போது கட்டிட பணியாளராகவோ அல்லது கடினமான வேலை செய்பவராகவோ இருக்க வேண்டும் என்று தோன்றியது.
     கோப்பி கடைத் தொகுதியிலிருந்து வெளியேறி எதிர்பக்கமாய் சென்றவரை நோக்கி திடீரென்று இரண்டு போலீசார் வேகமாய் ஓடி வந்தனர். இது வரை போலீசாரை விசாரிப்பவர்களாய் மட்டுமே பார்த்திருக்கிறேன். எப்போதும் கும்பலாய் அல்லது சந்தேகத்துக்கிடமாய் கூடி இருப்பவர்களிடம் பேசிக்கொண்டிருப்பார்கள். விசாரிப்பது போல கூட தோன்றாது. அவ்வளவு நிதானமாய் இருக்கும் அவர்களது அணுகுமுறை.
     போலீசாரின் இன்றைய இந்த ஓட்டம் வசந்தம் தொலைக்காட்சியில் பார்த்த நாடகத் தொடரின் ட்ரெயிலரை (வேட்டை?) நினைவுபடுத்தியது.
அந்த ஆடவருக்குப் பக்கத்தில் நடந்துக் கொண்டிருந்த சீன மாதுவை வேகமாய் தள்ளிச் செல்லும் படி சைகை காட்டி அவரை நெருங்கினார்கள் போலீசார். ஆடவரின் கையிலிருந்த  கோப்பியைக் கீழே போடும் படி சொல்ல அவர் பாதி குடித்துக் கொண்டிருந்த கோப்பியை அங்கேயிருந்த கைப்பிடிச் சுவரைத் தாண்டி வீசினார். அதற்குள்ளாக மேலும் இரண்டு போலீசார் வெவ்வேறு திசைகளிலிருந்து ஓடி வந்து அவரின் கைகளைப் பின்பக்கமாய் முறுக்கி விலங்கை மாட்டினர்.
அந்த ஆடவரின் வெளுத்த முகத்தில் எந்த உணர்ச்சியையும் காணமுடியவில்லை. அங்கேயிருந்தவர்களெல்லாம் உறைந்து போனவர்களாய் இக்காட்சியைப் நோக்கிக் கொண்டிருந்தார்கள்.
பார்த்துக் கொண்டிருந்த எனக்கு ஏனோ மிகவும் வருத்தமாக இருந்தது. அந்த நடுத்தர வயது ஆடவன் ஏதோவொரு குடும்பத்தின் மகனாக, கணவனாக, தந்தையாக இருக்கவேண்டும். கள்ள குடியுரிமை, போதைப்பொருள் பயன்படுத்தியது போன்ற ஏதொவொரு பொறுப்பில்லாத காரியத்தைச் செய்து இந்நிலைக்கு ஆளாகியிருக்க வேண்டும்.
      எது எப்படியோ! போலீசில் சிக்கிவிட்டான். அவன் வரவை எதிர்பார்த்து ஓடிவந்து காலைக் கட்டிக் கொள்ளும் ஒரு மகளோ அல்லது அவன் வந்து செல்லும் நாட்களை நோக்கி காலம் நகர்த்தும் ஒரு வயதான தாயோ அவனுக்கு இருக்கக் கூடும். அவர்களுடைய இந்த நாள் எப்படி விடிந்திருக்கும் என்று எண்ணுவதை என்னால் நிறுத்தமுடியவில்லை.  
போலீசாரின் கண்காணிப்பில் தான் பயமின்றி பாதுகாப்பாய் உணர்கிறோம் என்ற உண்மையெல்லாம் தாண்டி அவனுக்காக மனம் வருத்தப்பட்டது. அவன் சிறு எதிர்ப்பையும் காட்டாமல் சரணடைந்த தோரணையோ அல்லது ஏதோவொன்று அவன் பால் பச்சாதாபத்தை ஏற்படுத்துவதாய் இருந்தது.

அவனது காலைப் பசியை முழுதாய் ஆற்ற இயலாமல், பாதியில் தூக்கியெறியப்பட்ட கோப்பி என் மனதை சலனப்படுத்தியபடியே இருக்கிறது.

5.7.14

பிரிவு


பிரிவின் வழி உணர்த்துகிறார்கள்

சிலர்

அவர்களது அருமையை

சிலரோ

நம் நேரத்தின் அருமையை
 

நன்றியுரைத்தல்

இணையத்தில்
லைக்குகளும் பின்னூட்டங்களும்
பெற்று கடன்காரியாகிறேன்
அவற்றை சரியாய் திருப்பமுடியுமா
என்று
மனம் எப்போதும்
பதறியபடி இருக்கிறது

24.6.14

நான் படித்துக் கொண்டிருப்பது... 1


நேற்று படித்தது ரெ. கார்த்திகேசுவின் ‘வானத்து வேலிகள்’ மற்றும் ‘சூதாட்டம் ஆடும் காலம்’.

வானத்து வேலிகள் : இதில் சுதந்திரத்திற்கு முன்பான மலாயாவைப் பற்றி கொஞ்சம் அறிந்துக் கொள்ள முடிகிறது. முக்கியமாக

“இந்திய துணைக் கண்டத்தில் உள்ள அனைவரிலும் தென்னிந்தியத் தொழிலாளி, குறிப்பாக மதராஸி, எளிய, லேசான, திரும்பத் திரும்பச் செய்யக் கூடிய வேலைகளுக்கு உகந்தவனாக கருதப்பட்டான். அவன் வளைந்து கொடுக்கக் கூடியவன். வட இந்தியர்களைப் போல அவனுக்கு வாழ்க்கை லட்சியங்கள் கிடையாது. சீனர்களைப் போல சுயமுயற்சியும் வேலைத் திறமும் அவனுக்குக் கிடையாது. ஆனால் குறைந்த சம்பளத்தில் கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கை நடத்துவதற்கு இசைபவன் அவனேயாகும்! கே.எஸ்.சந்து : மலாயாவில் இந்தியர்கள்”
ரெ. கார்த்திகேசுவின் சிறுகதைகள் எனக்கு பிடிக்கும். அவற்றைத் தேடிப் படித்திருக்கிறேன். படித்துக் கொண்டிருக்கிறேன். அவரது நாவல்கள் என்னை அவ்வளவாய் ஈர்க்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
இன்று தொடங்கியிருப்பது பெருமாள் முருகனின் 'மாதொருபாகன்'.
 
பெருமாள் முருகன் – இவருடனான சந்திப்பைத் தவறவிட்டேன் என்ற காரணத்தினாலேயே அப்படி என்ன எழுதியிருக்கிறார் அல்லது எதைத் தவறவிட்டேன் என்று கண்டுபிடிக்கவே இவரது புத்தகங்களை படிக்கத் துவங்கினேன். விளைவு – செறிவான, சுவாரஸ்யமான எழுத்துகளைக் கண்டுபிடித்திருக்கிறேன்.

 

7.5.14

திருவிளையாடல்

இந்த மாதம் கதைக்களத்திற்கு கொடுக்கப்பட்ட தொடக்கவரி: அதைக் கேட்டவுடன் மாதவி மயங்கி சரிந்தாள்.
   
இதற்கு நான் எழுதிய 248 வார்த்தை கதை கீழே


அதைக் கேட்டவுடன் மாதவி மயங்கி சரிந்தாள்.

திடுக்கிட்டார் திருமால்.

சப்தமில்லாமல் தரிசனம் கொடுக்ககூடாதோ! குழந்தை பயந்துவிட்டாள், பாவம்!’ என்றவாறே மாதவியை மெல்லத் தொட்டாள் ஸ்ரீலட்சுமி. மயக்கம் தெளிந்த மாதவி, இருவரையும் கண்டு திகைத்துப்போனாள்.

நேற்றிரவு, துணைப்பாட வகுப்பாசிரியர் கொடுத்த கணக்கைச் செய்ய முயற்சித்த மாதவி அதைப் புரிந்துக்கொள்ள முடியாமல் திணறினாள். முடிக்காதவர்களை நோட்டீஸ்-பலகையில் குண்டூசியால் குத்தி தொங்க விடப்போவதாக பயமுறுத்தியிருந்தார் ஆசிரியர்.

ஆசிரியர் முன்பு வேலை செய்த தொடக்கப் பள்ளியில், இப்படி தண்டிக்கப்பட்ட சிறுவனின் நண்பனைத் தனக்குத் தெரியும் என்று சொன்னான், அவளோடு படிக்கும் ஜேடன். ஆனால் யாழினியோ, அவர் அவ்வாறு செய்தால் 999 என்ற எண்ணை அழைத்து புகார் செய்யலாம் என்றும் காவலர்கள் ஆசிரியரைச் சிறையில் அடைத்து விடுவார்கள் என்றும் சொன்னாள்.

அந்த கற்பனையே மாதவிக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஆனால் ஊசியால் குத்தப்பட்ட பிறகு தானே அப்படிச் செய்யமுடியும்! வலியை எப்படி தாங்குவது என்று பயமாய் இருந்தது. ரத்தம் வழிய பலகையில் தொங்குவதை அவளால் கற்பனை செய்ய முடியவில்லை. அந்த பயத்தோடு கடவுளை அழைத்த போது, அவர் இப்படி நேரில் வந்துவிடுவார் என்று அவள் நினைக்கவில்லை.

அதென்ன அப்பேற்பட்ட இமாலய கணக்கு?” என்றார் திருமால்.

மாதவி கேள்வியைச் சொன்னாள். திருமாலுக்கு மூளை குழம்பியது. குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட கணக்கையெல்லாமா கொடுப்பது! இதற்கு எப்படி விடையளிப்பது?

ஸ்ரீலட்சுமியின் முன் எப்பேற்பட்ட தலைகுனிவு!

காக்கும் தொழிலுக்கு உயிரியல் மட்டும் தெரிந்தால் போதாதோ!” என்று சமாளிக்க வந்தவர், லட்சுமிநாநாங்கு பதினாறுஎன்று கணக்கிட்டபடியே முறைப்பதைக் கண்டு அமைதியானார்.

சாமி! உங்களுக்கு எல்லாம் தெரியனுமே! இது மட்டும்...... எங்க ஆசிரியர் சொல்லிக்கொடுக்கும் போது தூங்கிட்டீங்களா?”

நான் எங்கேடியம்மா தூங்கறது!” என்றார் திருமால்.

தென்கொரியாவில் கப்பல் மூழ்கிய தினம் தொடங்கி, அவருக்கு பாம்பணையில் பொட்டுத் தூக்கமில்லை! கடலடியிலிருந்து குரல்கள் கேட்ட வண்ணமிருந்தன.

நான் பிறர் தொழிலில் தலையிட முடியாதே! ம்ஹீம்..... எல்லாம் விதி!’ என்று பெருமூச்சுவிட்டார்.

என்ன பிழைப்பிது! பேசாமல் பூலோகம் சென்று ஓர் அவதாரம் எடுத்துவிட்டு வரலாமா’, என்று தோன்றியவாறிருந்தது அவருக்கு.

ஸ்ரீலட்சுமியும் அதே நினைவில் கண்களைத் துடைத்தபடி,

நீ பயப்படாதேடி குழந்தே! நான் பார்த்துக்கறேன்!” என்றாள்.

பார்த்துக்கொண்டிருந்த போதே ஆசியளித்தபடி இருவரும் மறைந்தனர்.

திடுக்கிட்டு விழித்தாள் மாதவி.

மாதவி! இனி கணக்கு ட்யூஷன் இல்லை! அந்த ஆசிரியர் வெளிநாட்டுக்கு போறாராம்!”

இன்னிக்கி பள்ளி முடிஞ்சதும் வீட்டுக்கு வந்துடு.” என்றாள் அம்மா.

.... தெரியுமே!” என்றாள் மாதவி.

 

26.4.14

காலை காபியுடன் சில வார்த்தைகள். . .


சிங்கப்பூரில் ஒன்றாம் வகுப்பு சேர சரியாய் ஏழு வயது இருக்க வேண்டும். இங்கே வருடத்தை மட்டுமே வைத்து எந்த வகுப்பில் சேர வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள்.

பள்ளிகளில் இரண்டாம் வகுப்பிலிருந்து Streaming உண்டு. அதாவது அந்த பள்ளியில் படிக்கும் அனைத்து இரண்டாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்களையும் பார்த்து முதல் 30-40 மாணவர்களை பெஸ்ட் க்ளாசிலும், அடுத்த 40யை அடுத்த வகுப்பிலும்- இதே போல மதிப்பெண்களை வைத்து பிரிக்கிறார்கள். நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு ஆழ்ந்து மூளையைப் பயன்படுத்தும் விதமாக வேலைகளைக் கொடுக்கிறார்கள். அதற்காக கடைசியில் இருப்பவர்களை கைகழுவி விடுவதில்லை. அவர்களுக்கு அடிப்படைகளை நன்றாக போதிக்கிறார்கள். ஒவ்வொரு வருட இறுதியிலும் மதிப்பெண்களை வைத்து இப்படி வகுப்பைப் பிரிப்பதால், இடையில் விழிப்பு ஏற்பட்டு படித்தால் கூட கடைசி வகுப்பில் இருந்து பெஸ்ட் க்ளாசிற்கு செல்லும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

இப்படியாக படித்து தொடக்கநிலை ஆறு முடிக்கும் பொழுது P.S.L.E என்கிற பொதுத்  தேர்வை வைக்கிறார்கள். இந்த தேர்வில் மதிப்பெண்கள் t- score என்ற முறையில் கணக்கிடப் படுகின்றன. இது, இந்தப் பரிட்சையை எழுதிய மொத்த மாணவர்களின் சராசரி மதிப்பெண்களை வைத்து கணக்கிடப்படுகிறது. வினாத்தாள் எளிதாக இருந்து பெறும் மதிப்பெண்ணை விட, கடினமாக இருக்கும் போது கிடைக்கும் மதிப்பெண் அதிகமாக இருக்கிறது. தேர்வு முடிவுகளில் Total லையும் ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற Band களையும் மட்டுமே அறிவிக்கிறார்கள்.

இதன் பிறகு செகெண்டரி படிக்க எந்த பள்ளி செல்ல வேண்டும் என்பது, இரவில் போய் இடம் பிடித்து நிற்கவோ, பணம் கட்டவோ தேவையின்றி, cut-off வைத்து மட்டுமே தீர்மானிக்கப் படுகிறது. ஆறு பள்ளிகளை நாம் தேர்வு செய்ய வேண்டும். நம் மதிப்பெண்களை வைத்து கல்வியமைச்சு நமக்கான பள்ளியைத் தேர்வு செய்து கொடுக்கிறது.

இப்படி பட்ட பரீட்சையை போன வருடம் நாங்கள் எழுதி முடித்தோம். அதாவது என் பெண் எழுதி முடித்தாள். அது முடிந்து அடுத்த பள்ளி கிடைக்கும் வரை ஏற்பட்ட மன அழுத்தம் இருக்கிறதே.....! ஸ்ஸ்ஸ்ப்பா...
நாங்கள் முதலாவதாய் கேட்ட பள்ளி கிடைத்தது என்று சந்தோஷப்பட முடியாமல், மற்றொரு பிரபல பள்ளியிலிருந்து அழைப்பு. அங்கே வைத்த நேரடிப் பேட்டியில் தேர்வாகி, இந்தப் பள்ளியா அந்தப் பள்ளியா என்று நன்றாய் குழம்பி, பிறகு கணக்கிற்கும் அறிவியலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இரண்டாவது பள்ளியைத் தேர்ந்தெடுத்தோம். (அதற்கு முக்கிய காரணம் எங்களோடு நேரடிப் பேட்டிக்கு வந்த (அதிக மதிப்பெண்கள் பெற்ற) நிறைய மாணவர்களுக்கு இங்கே இடம் கிடைக்காததே என்பதையும் ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும்.)

இந்தப் பள்ளியின் உள்ளே நுழைந்து இப்போது தான் தலையெங்கே, வாலெங்கே என்று தடவிக் கொண்டிருக்கிறோம். இங்கே சராசரி மாணவியாய் திகழ்வதே பெரும் சாதனையாய் இருக்கிறது.

ஆனால், உங்கள் பெண் எங்கே படிக்கிறாள் என்று கேட்பவர்கள் அனைவரும், பள்ளியின் பெயரை கேட்டதும், சுந்தர காண்டத்தில் வரும் அதிர்ச்சி பைத்தியம் போல, ‘அந்தப் பள்ளியாஆஆஆ..!’ என்று வாய்பிளந்து நிற்பது  மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. (தன் மகளை சான்றோளெனக் கேட்ட தாய்!) சீருடையைப் பார்த்ததும் ‘she must be clever in maths and science’ என்று பின்னால் பேசுகிறார்களா என்று கவனிக்கத் தோன்றுகிறது.

இத்தகு காரணங்களால் கடந்த ஆறு மாதங்களாய் ப்ளாக் பக்கம் வர முடியாமல் போனது. இனியாவது உருப்படியாக எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். பார்ப்போம்!