26.4.14

காலை காபியுடன் சில வார்த்தைகள். . .


சிங்கப்பூரில் ஒன்றாம் வகுப்பு சேர சரியாய் ஏழு வயது இருக்க வேண்டும். இங்கே வருடத்தை மட்டுமே வைத்து எந்த வகுப்பில் சேர வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள்.

பள்ளிகளில் இரண்டாம் வகுப்பிலிருந்து Streaming உண்டு. அதாவது அந்த பள்ளியில் படிக்கும் அனைத்து இரண்டாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்களையும் பார்த்து முதல் 30-40 மாணவர்களை பெஸ்ட் க்ளாசிலும், அடுத்த 40யை அடுத்த வகுப்பிலும்- இதே போல மதிப்பெண்களை வைத்து பிரிக்கிறார்கள். நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு ஆழ்ந்து மூளையைப் பயன்படுத்தும் விதமாக வேலைகளைக் கொடுக்கிறார்கள். அதற்காக கடைசியில் இருப்பவர்களை கைகழுவி விடுவதில்லை. அவர்களுக்கு அடிப்படைகளை நன்றாக போதிக்கிறார்கள். ஒவ்வொரு வருட இறுதியிலும் மதிப்பெண்களை வைத்து இப்படி வகுப்பைப் பிரிப்பதால், இடையில் விழிப்பு ஏற்பட்டு படித்தால் கூட கடைசி வகுப்பில் இருந்து பெஸ்ட் க்ளாசிற்கு செல்லும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

இப்படியாக படித்து தொடக்கநிலை ஆறு முடிக்கும் பொழுது P.S.L.E என்கிற பொதுத்  தேர்வை வைக்கிறார்கள். இந்த தேர்வில் மதிப்பெண்கள் t- score என்ற முறையில் கணக்கிடப் படுகின்றன. இது, இந்தப் பரிட்சையை எழுதிய மொத்த மாணவர்களின் சராசரி மதிப்பெண்களை வைத்து கணக்கிடப்படுகிறது. வினாத்தாள் எளிதாக இருந்து பெறும் மதிப்பெண்ணை விட, கடினமாக இருக்கும் போது கிடைக்கும் மதிப்பெண் அதிகமாக இருக்கிறது. தேர்வு முடிவுகளில் Total லையும் ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற Band களையும் மட்டுமே அறிவிக்கிறார்கள்.

இதன் பிறகு செகெண்டரி படிக்க எந்த பள்ளி செல்ல வேண்டும் என்பது, இரவில் போய் இடம் பிடித்து நிற்கவோ, பணம் கட்டவோ தேவையின்றி, cut-off வைத்து மட்டுமே தீர்மானிக்கப் படுகிறது. ஆறு பள்ளிகளை நாம் தேர்வு செய்ய வேண்டும். நம் மதிப்பெண்களை வைத்து கல்வியமைச்சு நமக்கான பள்ளியைத் தேர்வு செய்து கொடுக்கிறது.

இப்படி பட்ட பரீட்சையை போன வருடம் நாங்கள் எழுதி முடித்தோம். அதாவது என் பெண் எழுதி முடித்தாள். அது முடிந்து அடுத்த பள்ளி கிடைக்கும் வரை ஏற்பட்ட மன அழுத்தம் இருக்கிறதே.....! ஸ்ஸ்ஸ்ப்பா...
நாங்கள் முதலாவதாய் கேட்ட பள்ளி கிடைத்தது என்று சந்தோஷப்பட முடியாமல், மற்றொரு பிரபல பள்ளியிலிருந்து அழைப்பு. அங்கே வைத்த நேரடிப் பேட்டியில் தேர்வாகி, இந்தப் பள்ளியா அந்தப் பள்ளியா என்று நன்றாய் குழம்பி, பிறகு கணக்கிற்கும் அறிவியலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இரண்டாவது பள்ளியைத் தேர்ந்தெடுத்தோம். (அதற்கு முக்கிய காரணம் எங்களோடு நேரடிப் பேட்டிக்கு வந்த (அதிக மதிப்பெண்கள் பெற்ற) நிறைய மாணவர்களுக்கு இங்கே இடம் கிடைக்காததே என்பதையும் ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும்.)

இந்தப் பள்ளியின் உள்ளே நுழைந்து இப்போது தான் தலையெங்கே, வாலெங்கே என்று தடவிக் கொண்டிருக்கிறோம். இங்கே சராசரி மாணவியாய் திகழ்வதே பெரும் சாதனையாய் இருக்கிறது.

ஆனால், உங்கள் பெண் எங்கே படிக்கிறாள் என்று கேட்பவர்கள் அனைவரும், பள்ளியின் பெயரை கேட்டதும், சுந்தர காண்டத்தில் வரும் அதிர்ச்சி பைத்தியம் போல, ‘அந்தப் பள்ளியாஆஆஆ..!’ என்று வாய்பிளந்து நிற்பது  மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. (தன் மகளை சான்றோளெனக் கேட்ட தாய்!) சீருடையைப் பார்த்ததும் ‘she must be clever in maths and science’ என்று பின்னால் பேசுகிறார்களா என்று கவனிக்கத் தோன்றுகிறது.

இத்தகு காரணங்களால் கடந்த ஆறு மாதங்களாய் ப்ளாக் பக்கம் வர முடியாமல் போனது. இனியாவது உருப்படியாக எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். பார்ப்போம்!