7.5.14

திருவிளையாடல்

இந்த மாதம் கதைக்களத்திற்கு கொடுக்கப்பட்ட தொடக்கவரி: அதைக் கேட்டவுடன் மாதவி மயங்கி சரிந்தாள்.
   
இதற்கு நான் எழுதிய 248 வார்த்தை கதை கீழே


அதைக் கேட்டவுடன் மாதவி மயங்கி சரிந்தாள்.

திடுக்கிட்டார் திருமால்.

சப்தமில்லாமல் தரிசனம் கொடுக்ககூடாதோ! குழந்தை பயந்துவிட்டாள், பாவம்!’ என்றவாறே மாதவியை மெல்லத் தொட்டாள் ஸ்ரீலட்சுமி. மயக்கம் தெளிந்த மாதவி, இருவரையும் கண்டு திகைத்துப்போனாள்.

நேற்றிரவு, துணைப்பாட வகுப்பாசிரியர் கொடுத்த கணக்கைச் செய்ய முயற்சித்த மாதவி அதைப் புரிந்துக்கொள்ள முடியாமல் திணறினாள். முடிக்காதவர்களை நோட்டீஸ்-பலகையில் குண்டூசியால் குத்தி தொங்க விடப்போவதாக பயமுறுத்தியிருந்தார் ஆசிரியர்.

ஆசிரியர் முன்பு வேலை செய்த தொடக்கப் பள்ளியில், இப்படி தண்டிக்கப்பட்ட சிறுவனின் நண்பனைத் தனக்குத் தெரியும் என்று சொன்னான், அவளோடு படிக்கும் ஜேடன். ஆனால் யாழினியோ, அவர் அவ்வாறு செய்தால் 999 என்ற எண்ணை அழைத்து புகார் செய்யலாம் என்றும் காவலர்கள் ஆசிரியரைச் சிறையில் அடைத்து விடுவார்கள் என்றும் சொன்னாள்.

அந்த கற்பனையே மாதவிக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஆனால் ஊசியால் குத்தப்பட்ட பிறகு தானே அப்படிச் செய்யமுடியும்! வலியை எப்படி தாங்குவது என்று பயமாய் இருந்தது. ரத்தம் வழிய பலகையில் தொங்குவதை அவளால் கற்பனை செய்ய முடியவில்லை. அந்த பயத்தோடு கடவுளை அழைத்த போது, அவர் இப்படி நேரில் வந்துவிடுவார் என்று அவள் நினைக்கவில்லை.

அதென்ன அப்பேற்பட்ட இமாலய கணக்கு?” என்றார் திருமால்.

மாதவி கேள்வியைச் சொன்னாள். திருமாலுக்கு மூளை குழம்பியது. குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட கணக்கையெல்லாமா கொடுப்பது! இதற்கு எப்படி விடையளிப்பது?

ஸ்ரீலட்சுமியின் முன் எப்பேற்பட்ட தலைகுனிவு!

காக்கும் தொழிலுக்கு உயிரியல் மட்டும் தெரிந்தால் போதாதோ!” என்று சமாளிக்க வந்தவர், லட்சுமிநாநாங்கு பதினாறுஎன்று கணக்கிட்டபடியே முறைப்பதைக் கண்டு அமைதியானார்.

சாமி! உங்களுக்கு எல்லாம் தெரியனுமே! இது மட்டும்...... எங்க ஆசிரியர் சொல்லிக்கொடுக்கும் போது தூங்கிட்டீங்களா?”

நான் எங்கேடியம்மா தூங்கறது!” என்றார் திருமால்.

தென்கொரியாவில் கப்பல் மூழ்கிய தினம் தொடங்கி, அவருக்கு பாம்பணையில் பொட்டுத் தூக்கமில்லை! கடலடியிலிருந்து குரல்கள் கேட்ட வண்ணமிருந்தன.

நான் பிறர் தொழிலில் தலையிட முடியாதே! ம்ஹீம்..... எல்லாம் விதி!’ என்று பெருமூச்சுவிட்டார்.

என்ன பிழைப்பிது! பேசாமல் பூலோகம் சென்று ஓர் அவதாரம் எடுத்துவிட்டு வரலாமா’, என்று தோன்றியவாறிருந்தது அவருக்கு.

ஸ்ரீலட்சுமியும் அதே நினைவில் கண்களைத் துடைத்தபடி,

நீ பயப்படாதேடி குழந்தே! நான் பார்த்துக்கறேன்!” என்றாள்.

பார்த்துக்கொண்டிருந்த போதே ஆசியளித்தபடி இருவரும் மறைந்தனர்.

திடுக்கிட்டு விழித்தாள் மாதவி.

மாதவி! இனி கணக்கு ட்யூஷன் இல்லை! அந்த ஆசிரியர் வெளிநாட்டுக்கு போறாராம்!”

இன்னிக்கி பள்ளி முடிஞ்சதும் வீட்டுக்கு வந்துடு.” என்றாள் அம்மா.

.... தெரியுமே!” என்றாள் மாதவி.