30.8.14

விடியல்

இன்று காலை எழுந்து சமையலறைக்குள் வரும் போதே சில்லென்ற காற்று. . . பத்து மாடிக்கும் கீழே இளங்காலை இருளில் நின்றுக்கொண்டிருந்த கார்களையும், பக்கத்து எதிர் ப்ளோக்குகளின் அறைகளில் தெரிந்த வெளிச்சத் துணுக்குகளை ரசித்தபடி சோம்பேறித் தனமாய் சன்னல் கம்பிகளில் முகத்தைப் புதைத்போது காற்றோடு ஓரிரு மழைத்துளிகள் முகத்தில் மோதின. வெளியே இருந்த சிலுசிலுப்பில் மழை வலுக்கும் என்று தோன்றியது. கூடவே, அப்படி பெய்தால் வழக்கமாய் செல்லும் நடை பயிற்சி இன்று இல்லை என்று மனதிற்குள் சின்ன மகிழ்ச்சி
     நினைத்தது போல் நல்ல மழைமழைக்குள்ளாக பார்க்கும் மனித முகங்கள் எப்போதும் மகிழ்ச்சியைச் சுமந்திருக்கின்றன. மழை போர்வைக்குள்ளிருப்பவர்களை இதமான சோம்பலும், தனக்குள் இறங்குபவர்களைப் புத்துணர்ச்சியும் கொள்ள வைக்கிறது. மனிதர்கள் மழை பெய்யும் போது குளிர்ந்து காணப்படுகிறார்கள். மழை பெய்தால் எனக்குள்ளும் உற்சாகம் குடிகொண்டுவிடும்.
     மழையின் காரணமாக வழக்கமான பாதையில் செல்லாமல் மேற்கூரையிருந்த பகுதிகளின் வழியாக பேருந்து நிறுத்தம்  நோக்கி நடந்து கொண்டிருந்தேன், காதில் இளையராஜா. . . கோப்பி கடைகள் மட்டும் முழு சுறுசுறுப்பில் இயங்கிக் கொண்டிருந்தனசோங் பாங்கின் மூடியிருந்த திறக்கப்பட்டுக் கொண்டிருந்த கடைகளைக் கண்களால் அளைந்தபடி அவசரமில்லாமல் நடந்தேன்
    எனக்கு முன் நெட்டையான மனிதர் ஒருவர் ப்ளாஸ்டிக் பையில் இருந்த கோப்பியை ஸ்ட்ராவால் உறிஞ்சியபடி சென்றுக் கொண்டிருந்தார். எந்த நாட்டவர் என்று சரியாக தெரியவில்லை. நிச்சயம் தமிழர் இல்லை. உறுதியான உடற்கட்டைப் பார்க்கும் போது கட்டிட பணியாளராகவோ அல்லது கடினமான வேலை செய்பவராகவோ இருக்க வேண்டும் என்று தோன்றியது.
     கோப்பி கடைத் தொகுதியிலிருந்து வெளியேறி எதிர்பக்கமாய் சென்றவரை நோக்கி திடீரென்று இரண்டு போலீசார் வேகமாய் ஓடி வந்தனர். இது வரை போலீசாரை விசாரிப்பவர்களாய் மட்டுமே பார்த்திருக்கிறேன். எப்போதும் கும்பலாய் அல்லது சந்தேகத்துக்கிடமாய் கூடி இருப்பவர்களிடம் பேசிக்கொண்டிருப்பார்கள். விசாரிப்பது போல கூட தோன்றாது. அவ்வளவு நிதானமாய் இருக்கும் அவர்களது அணுகுமுறை.
     போலீசாரின் இன்றைய இந்த ஓட்டம் வசந்தம் தொலைக்காட்சியில் பார்த்த நாடகத் தொடரின் ட்ரெயிலரை (வேட்டை?) நினைவுபடுத்தியது.
அந்த ஆடவருக்குப் பக்கத்தில் நடந்துக் கொண்டிருந்த சீன மாதுவை வேகமாய் தள்ளிச் செல்லும் படி சைகை காட்டி அவரை நெருங்கினார்கள் போலீசார். ஆடவரின் கையிலிருந்த  கோப்பியைக் கீழே போடும் படி சொல்ல அவர் பாதி குடித்துக் கொண்டிருந்த கோப்பியை அங்கேயிருந்த கைப்பிடிச் சுவரைத் தாண்டி வீசினார். அதற்குள்ளாக மேலும் இரண்டு போலீசார் வெவ்வேறு திசைகளிலிருந்து ஓடி வந்து அவரின் கைகளைப் பின்பக்கமாய் முறுக்கி விலங்கை மாட்டினர்.
அந்த ஆடவரின் வெளுத்த முகத்தில் எந்த உணர்ச்சியையும் காணமுடியவில்லை. அங்கேயிருந்தவர்களெல்லாம் உறைந்து போனவர்களாய் இக்காட்சியைப் நோக்கிக் கொண்டிருந்தார்கள்.
பார்த்துக் கொண்டிருந்த எனக்கு ஏனோ மிகவும் வருத்தமாக இருந்தது. அந்த நடுத்தர வயது ஆடவன் ஏதோவொரு குடும்பத்தின் மகனாக, கணவனாக, தந்தையாக இருக்கவேண்டும். கள்ள குடியுரிமை, போதைப்பொருள் பயன்படுத்தியது போன்ற ஏதொவொரு பொறுப்பில்லாத காரியத்தைச் செய்து இந்நிலைக்கு ஆளாகியிருக்க வேண்டும்.
      எது எப்படியோ! போலீசில் சிக்கிவிட்டான். அவன் வரவை எதிர்பார்த்து ஓடிவந்து காலைக் கட்டிக் கொள்ளும் ஒரு மகளோ அல்லது அவன் வந்து செல்லும் நாட்களை நோக்கி காலம் நகர்த்தும் ஒரு வயதான தாயோ அவனுக்கு இருக்கக் கூடும். அவர்களுடைய இந்த நாள் எப்படி விடிந்திருக்கும் என்று எண்ணுவதை என்னால் நிறுத்தமுடியவில்லை.  
போலீசாரின் கண்காணிப்பில் தான் பயமின்றி பாதுகாப்பாய் உணர்கிறோம் என்ற உண்மையெல்லாம் தாண்டி அவனுக்காக மனம் வருத்தப்பட்டது. அவன் சிறு எதிர்ப்பையும் காட்டாமல் சரணடைந்த தோரணையோ அல்லது ஏதோவொன்று அவன் பால் பச்சாதாபத்தை ஏற்படுத்துவதாய் இருந்தது.

அவனது காலைப் பசியை முழுதாய் ஆற்ற இயலாமல், பாதியில் தூக்கியெறியப்பட்ட கோப்பி என் மனதை சலனப்படுத்தியபடியே இருக்கிறது.

2 comments:

ஸ்ரீராம். said...

ஒரு மழைநாளின் சந்தோஷம் முடிவுக்கு வந்த நேரம் அதுவா?

அப்பாதுரை said...

ஒரு வருசமாச்சே வலைப்பக்கம் வந்து?
நலம் தானே?