26.3.16

இராம அயணத்துடன் பயணம் -1

திடீரென்று கம்ப ராமாயணம் படித்துப் பார்க்க வேண்டும் என்று ஆர்வம் எழுந்தது. உங்களிடமிருந்தும் கற்றுக் கொள்ளும் நோக்கத்தோடு, நான் படித்ததை, புரிந்துக் கொண்டதை இங்கே பகிர்கிறேன். உங்களுக்குத் தோன்றுவதைச் சொல்லுங்கள்.  

பொதுவாய் மண் வாகு என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். ஒரு ஊரில் விளையும் செடி அல்லது செய்யப்படும் பொருள் அதற்கென்று தனி ருசியைக் கொண்டிருக்கிறது. 
பண்ரூட்டி பலாப்பழம், சேலம் மாம்பழம், மதுரை மல்லி எல்லாம் இப்படித் தான் தம் மண் வாகைக் கொண்டு நாமம் பெற்றன.
மனிதர்களின் தன்மையும் மண்ணைக் கொண்டிருக்கிறது என்பதை வீரம் விளைந்த மதுரை, தஞ்சாவூர்க் குசும்பு போன்ற புவி சார்ந்த குறியீடுகளிலிருந்து தெரிந்துக் கொள்ளலாம்.
அது போல, சரயு ஆற்று நீரால் வளம் பெற்றது கோசல நாட்டின் மண். அம்மண்ணே அங்கு வாழ்ந்த மக்களின் குணத்தையும் நிர்ணயித்தது என்கிறார் கம்பர்.
பொதுவாய் மாந்தர்களைக் குற்றம் புரியத் தூண்டுவன இரண்டு விஷயங்கள்.
ஒன்று அவர்களின் ஐம்பொறிகள்,
மற்றொன்று,
காசு மாலை ஒலிக்கும் மார்புகளையும்,
அம்பு போன்ற கூரிய விழிகளைக் கொண்ட
மாதர்களின் கண்.
இவை இரண்டும் கூட கோசல நாட்டில் நெறி பிறழாதவையாக இருக்கின்றன.

அத்தகைய பெருமை கொண்ட கோசல நாட்டை அழகு செய்கிறது சரயு ஆறு. அவ்வாற்றின் அழகைக் கூறுவோம் என்று சொல்லி, தனது முதல் பாடலைத் துவக்கி இருக்கிறார் கம்பர்.

பால காண்டம்
ஆற்றுப்படலம்
ஆசலம் புரி ஐம்பொறி வாளியும்
காசு அலம்பும் முலையவர் கண் எனும்
பூசல் அம்பும், நெறியின் புறம் செலாக்
கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்.

ஆசு- குற்றம்
அலம்- நிறைய
வாளி- அம்பு
காசு அலம்பும்- காசுமாலை அசையும்
அணி- அழகு

கற்றுக் கொண்டவை:
ஆசு கவி முன்பே தெரியும், ஆசு என்றால் குற்றம் என்பது எனக்கு புதிது.
அலம்பும் என்பதை அதே அர்த்தத்தில் (அசைதல்) பயன் படுத்தி கேட்டிருக்கிறேன்.
இங்கே வாளிக்கு அம்பு என்ற அர்த்தம் எனக்குப் புதிது.

பாட்டன் வெட்டி யெடுத்த கேணியில்
வாளியால் நீர் சேந்திய வேணியின்
படம் மாட்டியிருந்தது ஆணியில்
என்று நான் கவிதை எழுதினால், கம்பர் நிச்சயம் குழம்பிப் போவார், வாளியின் அர்த்தற்காக அல்ல, 
இது கவிதை என்று சொன்னதற்காக!
(படம் இணையத்திலிருந்து)

4 comments:

அப்பாதுரை said...

ஆசிரியர் என்ற பெயர் ஆசு+இரியர் எனப்பிரியும். பிழை நீக்கிக் கற்றுத் தருவதால் ஆசிரியர். :-) ஹிஹி.. என் தமிழ் வாத்தியார் சொன்னது நினைவுக்கு வந்தது.. மற்றபடி எதுவுமில்லை.

மீண்டும் எழுத வந்ததில் மகிழ்ச்சி. கம்பன் பாடல்களில் நிறைவைத் தருபவை. எப்படி இவருக்கத் தோன்றியது என்ற பிரமிப்பைத் தருபவை - வால்மீகியை அப்படியே ஈயடிக்கவில்லை என்பதும் நிறைவு.

தொடருங்கள்.

HVL said...

இன்று வரை அவ்வார்த்தையை பயன்படுத்துகிறோம் என்று அறிந்ததில் மகிழ்ச்சி.
வருகைக்கு நன்றி அப்பாதுரை சார்.

ஸ்ரீராம். said...

நல்ல முயற்சி. தமிழின்பால் ஈர்க்கப் பட்டிருக்கிறீர்கள்! நான் இதுவரை படித்ததில்லை. (ஹிஹிஹி) தொடர்கிறேன்.

HVL said...

ஈர்ப்பென்று சொல்ல முடியுமா தெரியவில்லை! கம்பர் இராமாயணத்தில் ஏறக்குறைய 3லட்சம் சொற்கள் பயன்படுத்தி இருக்கிறாராம். அவற்றுள் கிட்டத்தட்ட 1 லட்சம் unique சொற்களாம். இதை நாஞ்சில் நாடன் சொல்ல கேட்டதிலிருந்து ஏற்பட்ட ஒரு ஆர்வம்...