21.6.16

ரோஜர்

(சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திய ஜூன் மாத கதைகளத்தில் இரண்டாம் பரிசு பெற்ற குறுங்கதை.  கொடுக்கப்பட்ட முதல்வரிக்கு ஏற்ப 300 வார்த்தைகளுக்குள் எழுதிய கதை.)

பேசுவதற்கு ஒருவருமே இல்லாமற் போய்விட்ட தனிமை என்னை சித்திரவதை செய்தது.  நூற்றியிருபத்தோராவது முறையாக என்னை குனிந்து பார்த்துக் கொண்டேன். சந்தேகமே இல்லாமல் ஒரே இரவில் உருவம் மாறிப் போயிருந்தது. தன்னிரக்கத்தைத் துறந்து, புது உடலில் என்னைப் பழக்கிக் கொள்ள ஒரு முறை சிலிர்த்துக் கொண்டேன். மூன்று ஈக்கள் திடுக்கிட்டுப் பறந்தனதொங்கிக் கொண்டிருந்த நாவை பிரயர்த்தனப்பட்டு உள்ளிழுத்துக் கொண்டேன். காலடி சத்தம் கேட்க முன்னெச்சரிக்கையுடன் காதுகளை விடைத்துக் கொண்டேன்.

யாரது?’ என்று குரலை உயர்த்திய போதுபௌவ்என்ற குரைப்பொலியாய் வெளி வந்தது. இரண்டொரு முறை முயற்சித்த போது
இப்ப என்னத்துக்கு இப்படி குரைக்கிற!” என்று வந்தவன் என் மகனே தான்!
டேய்! யாராவது டாக்டர பார்க்கணும்டா!’ என்று சொல்ல முயற்சிக்க, “சும்மா கிட!” என்று தலையில் தட்டினான்.

 “என்னடா இங்க!”
ஒன்னுமில்லப்பா இந்த ரோஜர் சும்மா குலைச்சுகிட்டே இருக்கு!”
லேசாய் விந்தியபடி வந்த அவனுடைய அப்பாவைப் பார்த்து அதிர்ந்தேன்
அப்படியே நேற்று வரையிருந்த என் தோற்றத்திலிருந்தான். உற்றுப் பார்த்ததில் அந்தப் பார்வையை அடையாளம் காணமுடிந்ததுசந்தேகமேயில்லாமல் நேற்றிரவு  என்னிடம் உதைபட்ட அதே ரோஜர் தான்.  காலில் நேற்று  அடிபட்ட இடத்தில் கட்டு போட்டிருந்தான்.

எப்படி என்ற கேள்வி மறந்து போய் இப்போது  பயம் வந்தது. ரோஜரை எனக்குப் பிடிக்காமல் போக நிறைய காரணங்கள். பொதுவாய் எனக்கு நாய்கள் பிடிப்பதில்லை. அதிலும் என் வார்த்தைகளைத் தரையைப் பார்த்தபடி புறக்கணிக்கும் மகன், இது குரைத்தால் இதனுடன் முழுதாய் மூன்று நிமிடங்களாவது நின்று பேசிப் போன போது, இதை எனக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை. என் மகன் சிகரெட் பிடித்தால் என்னிடம் எத்து வாங்குவது, அவனருகில் காலை உரசிக் கொண்டு நிற்கும் ரோஜர் தான். அடிப்பட்டு மூலையில் ஒடுங்கிப் படுத்திருக்கும் ரோஜர் என்னைப் பார்ப்பது இதே பார்வையில் தான்

இப்போது அதில் வெறி கூடியிருப்பது தெரிந்தது. என்னை மெல்ல நெருங்கிய  ரோஜர், என்னை  ஓங்கி எட்டி உதைத்ததில் சுவரில் மோதிக் கீழே விழுந்தேன். என் மகன் ஓடி வந்துத் தூக்கிய போது உடல் உதறிக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். அவன் கண்கள் கலங்கியிருந்தன. ஒரு ஹீம்காரத்துடன் உள்ளே சென்று விட்டது ரோஜர்.

என்னைத் தடவிக் கொடுத்த மகன், “பயந்துட்டியா! அவர் அப்படித் தான், என்னைக் கண்டா பிடிக்காது! நான் உருப்படாதவன், சரியா படிக்காதவன், அவரோட உழைப்புல சாப்பிடுறவன்பி.எஸ்.எல்.ஈல, லெவல்ல, நான் எடுத்த மதிப்பெண் அவருக்கு அவமானம்நான் பெண்கள் பின்னால சுத்தறேன்னு சந்தேகம்உன்மேல அவர் காட்டுறது, என் மேல இருக்கற வெறுப்பு!”
கொஞ்சம் பொறு! எனக்கு சீக்கிரம் வேலை கிடைச்சிடும்! நான் உன்னை  அழைச்சுட்டு போயிடறேன்!”


நான் பேசும் போது பதிலே பேசாமல் குனிந்துக் கொண்டிருக்கும் என் மகன், நாயிடம் மட்டுமே முணுமுணுக்கும் என் மகன்அவன் இப்போது  பேசுவதைக் கேட்டு   என் உடல் நடுங்கத் துவங்கியது.

2 comments:

ஸ்ரீராம். said...

நன்றாயிருக்கிறது. அடுத்தவர் உணர்வுகளை நாம் புரிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம்! அது சரி, அந்த உருமாற்றம் ஏன், எப்படி நிகழ்ந்தது என்று சொல்லக் கூடாதா? அப்புறம் எழுத்துரு ஏன் இப்படி இருக்கிறது?!! மொபைலிலிருந்து போஸ்ட் செய்யப்பட்டதோ...

:)))

HVL said...

நன்றி, ஸ்ரீ ராம். உருமாற்றம் procedureஐ ஒரு கதையா எழுதிடலாம். Windows automatically updated and so had a problem with fonts. இப்ப சரி பண்ணிட்டேன்