4.9.16

உறுத்தல்

     அடுத்த நாள் அதே இடத்தைக் கடக்கும்போது உடல் முழுவதும் ஒரு கணம் விறைப்படைந்து பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பியது. ஆனால் மனம் இன்னும் சமாதானமடையவில்லை. வேகமாய் அவ்விடத்தை விட்டு அகன்றார் சேஷையா. நேற்று நடந்தது கனவென்று யாராவது சொன்னால் நன்றாய் இருக்குமெனப்பட்டது.  
     மருத்துவமனையில் பிச்சியைப் போல் அமர்ந்திருந்த மருமகளைப் பார்க்கும் போது இந்த விபத்தில் நித்திலனுக்கு பதில், தான் சிக்கியிருக்கலாமே என்ற பரிதவிப்பு நூறாவது முறையாக எழுந்தது. மூட்டுவலியால் அருகில் இருந்த மேம்பாலத்தில் ஏறவும் சிரமப்பட்டு சற்று தூரத்தில் இருந்த சிக்னலை நோக்கி நடக்கவும் சோம்பல் பட்டு, சாலையை இடையில் கடக்கத் துணிந்ததை எண்ணி மீண்டுமொரு முறை தன்னை வெறுத்தார். வாகனம் வருவதற்குள் கடந்து விடலாம் என்று எண்ணியது பிசகாய்ப் போனது. பாதி சாலையைக் கடந்துக் கொண்டிருக்கும் போது தான் வளைவில் திரும்பிய கார் கண்ணில் பட்டது. நித்திலனும் தன்னுடன் வந்துவிடுவான் என்றெண்ணி வேகமாய் சாலையைக் கடந்தார் அவர். காரோட்டி இவர்களைப் பார்த்து பதறிப் போய் ஒலியெழுப்பியதில் நித்திலன் அரண்டு பின்னே நகர்ந்துவிடுவான் என்று கிஞ்சித்தும் நினைக்கவில்லை. அடுத்ததாய் வந்த பேருந்து ஓட்டுனரும் இதை எதிர்பார்த்திருக்கவில்லை. விளைவு… இப்போது நித்திலன் அவசர சிகிச்சைப் பிரிவில்! சாலையை கண்டபடி கடக்காதீர்கள் என்று தலையிலடித்துக் கொள்ளும் அரசாங்கத்திற்கு இருக்கும் அக்கறையில், ஒரு விழுக்காடு கூட தனக்கு இல்லையே என்று தன்னிரக்கத்தில் கரைந்துக் கொண்டிருந்த போது ‘ஐயோ!’வென கத்திக்கொண்டு உள்ளே ஓடினாள் மருமகள்.
     காரியத்தின் போது கூட யாரும் அவரை ஏனென்று ஒரு வார்த்தைக் கேட்கவில்லை. வந்தவர்களும் இங்கிதம் தெரிந்து கையைப் பிடித்து அழுத்திவிட்டு சென்றார்கள். அவரால் இந்த மௌனத்தைப் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. யாராவது தன்மீது குற்றம் சுமத்தினால் தன் துக்கத்தை வெளிப்படுத்தவாவது வாய்ப்பு கிடைக்குமென தோன்றியது.
அன்று இரவு சாலையை வெறித்தபடி அமர்ந்திருந்த மகனிடம் சென்றார். இவர் வந்ததைக் கூட கவனிக்கவில்லை அவன்.
“அப்பாவை மன்னிச்சிடுப்பா!” என்று அவர் சொன்ன போது பதறிப் போனான்.
“என்னப்பா, நீங்க!”
“நேரம் சரியில்லை, நீங்க என்ன பண்ணுவீங்க!”
‘அந்த நேரம் என் மூலமாகவா வரவேண்டும்!’ என்று அவர் மனம் மேலும் நொந்தது.
“அப்பா! இங்கிருந்தா அவ நித்திலனை நினைச்சி அழுதுகிட்டே இருப்பா! நாம பேசாம வேற வீட்டுக்கு போயிடலாம்….”  என்று சில நாட்கள் கழித்து மகன் சொன்ன போது அவரால் மறுத்துப் பேச முடியவில்லை. அவர்களோடு  கிளம்பிப் போகவும் இயலவில்லை. நித்திலனின் உடைமைகளை குழந்தைகள் இல்லத்திற்குக் கொடுத்து விடலாம் என்று சொன்னதை மட்டும் மறுத்துவிட்டார். அவனது அறையில் இருக்கும் எதையும் மாற்றி வைக்கக் கூட அனுமதிக்கவில்லை அவர்.
     இப்போதெல்லாம் சேஷையா இரவில் நித்திலனின் அறையில் தான் படுத்துக் கொள்கிறார். நாள் தவறாமல் விபத்து நடந்த இடத்திற்குச் சென்று வெகுநேரம் நிற்கிறார்.  சாலையை நடுவே கடக்கத் தயாராகுபவர்களை பதட்டதோடு தடுக்கிறார். பலர் அவரைப் பைத்தியமென்று கடந்து சென்றாலும், சிலர் அவர் கண்களில் தெரியும் தீவிரத்தில், போக்குவரத்து விளக்கை நோக்கி நகரவே செய்கின்றனர்.  
(சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திய (ஜூலை மாத) கதைகளத்தில் முதல் பரிசு பெற்ற கதை)

2 comments:

Thenammai Lakshmanan said...

விழிப்புணர்வுக் கதை. கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது :(

HVL said...

நன்றிங்க